Sunday, December 19, 2010

ராகுலின் பேச்சுக்கு நாடு முழுவதும்கடும் எதிர்ப்பு:இந்து அமைப்புகள் போராட்டம்

மும்பை:"லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை விட, இந்தியாவில் செயல்படும் பழமைவாத இந்து அமைப்புகள் ஆபத்தானவை' என, தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலின் கருத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொறுப்பற்ற மற்றும் பக்குவமற்ற பேச்சு என, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பல இடங்களில் ராகுலுக்கு எதிராக, உருவ பொம்மை எரிப்பு உட்பட பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமெரிடம், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கூறியதாக சில செய்திகள் வெளியாகின. விக்கிலீக்ஸ் இணையதளம் இதை வெளியிட்டிருந்தது.அதில், "லஷ்கர்-இ-தொய்பா போன்ற பாக்., பயங்கரவாத அமைப்புகளை விட, பழமைவாத இந்து அமைப்புகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ளது' என, ராகுல் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்து அமைப்புகளை விமர்சித்த ராகுலின் கருத்துக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உலக நாடுகள் கூறிவருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவது தெரிந்தும், அமெரிக்கா ஏன் அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதற்கான உண்மையான காரணம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா எடுத்து வரும் கொள்கை முடிவுகளை ஊக்குவிக்கும் வகையில், ராகுல் கருத்து தெரிவித்து வந்துள்ளார்.இதனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அமெரிக்கா மீது குறை கூறுவதில் அர்த்தமில்லை. ராகுலின் கருத்துக்களால் நாட்டிற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் ராகுல் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "ராகுலின் பேச்சு பொறுப்பற்றது, பக்குவமற்றது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்துவதாக அமையும். பயங்கரவாதத்திற்கு உதவும், நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்' என்றார்.

பாரதிய ஜனசக்தி தலைவர் உமாபாரதி கூறியதாவது:ராகுல் அனுபவமற்றவர் என்பதால் தான், இத்தகைய கருத்துக்களை வெளியிடுகிறார். காங்கிரஸ் ஒரு பொறுப்பற்ற கட்சி. அக்கட்சி, தன் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறது. முன்னாள் பிரதமர்கள் இந்திராவும், ராஜிவும், விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தனர். ஆனால், ராஜிவ் அவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்.திக்விஜய் சிங்கிடம் பாடம் படித்தவர் ராகுல். அதனால் தான் இத்தகைய பொறுப்பற்ற கருத்தை தெரிவித்துள்ளார். அவர் என்னிடம் பாடம் படித்திருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டார். திக்விஜய் சிங், அவருக்கு தவறான பாடங்களை போதித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவை கேட்டார். அதுமட்டுமல்லாமல், அங்கு நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும், ஆர்.எஸ்.எஸ்.,க்கு இடம் கொடுத்தார். இது வரலாற்று உண்மை. இதை ராகுல் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.நான் மீண்டும் பா.ஜ.,வில் சேருவது பற்றி, நிதின் கட்காரியும், அத்வானியும் என்னிடம் பேசினர். அதுபற்றி நான் இன்னும் முடிவெடுக்கவில்லை.இவ்வாறு உமாபாரதி கூறினார்.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், ""இந்து சமுதாயத்திற்கு எதிரான ராகுலின் கருத்தை சகித்துக் கொள்ள முடியாது,'' என கூறியுள்ளார். இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுலின் உருவ பொம்மையை, பஜ்ரங்தளம் அமைப்பினர் ஜம்முவில் எரித்தனர்.ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அவருக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். இதேபோல், நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களும் ராகுலின் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148590

No comments:

Post a Comment