Tuesday, December 21, 2010

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம்

‘‘ஆத்தா சும்மா இருக்க மாட்டா..!’’
‘‘கர்த்தர் நிச்சயம் தண்டிப்பார்!’’
ஈரோடு மெம்பால விஷயத்தில் மத மோதல் அபாயம்




கட்டப்படுவதற்கு முன்பே மத அமைப்புகளின் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது ஈரோட்டில் ஒரு மேம்பாலம்.

‘அம்மனுக்கு துரோகம் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சிவலோக பதவி அடையுமாறு பிரார்த்திக்கிறோம்’- என்று இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு பூதாகரமாகியிருக்கிறது பிரச்னை. போராட்டத்தில் குதித்துள்ள மாரியம்மன் நில மீட்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம்.

‘‘ஈரோட்டில் தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பாலம் அமைக்க வேண்டிய இடம் அரசு மருத்துவமனை சந்திப்பு சாலை. ஆனால் அதை விட்டுவிட்டு வேண்டுமென்றே பன்னீர்செல்வம் பார்க்கில் மாவட்ட நிர்வாகம் ‘எல்’ வடிவ மேம்பாலம் அமைக்க முழு வீச்சில் வேலை செய்து வருகிறது. இந்த பாலம் அமைவதால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இங்கே இருக்கும் மாரியம்மன் கோயிலை தரைமட்டம் ஆக்கும் முயற்சியாகவே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாரியம்மன் கோயில் இருக்கும் இடத்துக்கு பின்புறம் சுமார் 400 அடி தொலைவில் இருந்த எல்லை தெய்வம் பிடாரியம்மன் சிலை நாசக்காரர்களால் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அந்தச் சிலை தற்போதும் கூட மாரியம்மன் கோவில் வளாகத்திலேயே சாட்சியாக இருக்கிறது. 1931-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள் 4 பேர் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன. ஆங்கில அரசின் ஆதரவுடன் இப்படி கட்டுக்கடங்காத அராஜகத்தில் ஈடுபட்ட சி.எஸ்.ஐ. நிர்வாகம் அப்போதே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாரியம்மனுக்கு சொந்தமான நிலத்தை அரசு நிலம் எனச் சொல்லி 40 ஏக்கரை அபகரித்துள்ளது. இந்த நிலங்களில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, மருத்துவமனை என கட்டடங்களை அமைத்து வசூல் வேட்டையில் கொழித்து வருகிறது.

அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பொது வழித் தடம் வழியாக 80 அடி சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநகரின் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தீரும். 1970-ம் ஆண்டிலேயே அரசு பரிந்துரைசெய்து, 1978-ல் ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது. 2007-ல் கூட தற்போதைய மேயரால் தீர்மானம் நிறைவேற்றபடடுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவிலை’’ என்று மூச்சுவிட்டுக் கொண்டவர் தொடர்ந்தார்.

‘‘80 அடி சாலையில் சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பை தவிர மீதமுள்ள வழித்தடம் தற்போது உபயோகத்தில் உள்ளது. அப்படியிருக்க சி.எஸ்.ஐ. மீது கை வைக்க ஏன் தயக்கம் காட்டுகின்றனர்? சில லட்சம் ரூபாய் செலவில் அமையக்கூடிய 80 அடி அகல சாலை அமைப்பதை தவிர்த்து விட்டு, 12 கோடி ரூபாய்க்கு பாலம் கட்டி மக்களின் வரிப் பணத்தை ஏன் வீணடிக்கப் பார்க்கிறார்கள்? இதன் காரணம் என்ன தெரியுமா? பெரிய மாரியம்மன் கோயிலை அகற்றுவதற்கும், அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை நிரந்தரமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கே தாரை வார்ப்பதற்காகவும்தான் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது.

மாரியம்மனின் நிலத்தை மீட்க நாங்கள் 1999-ம் ஆண்டில் இருந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம். பொங்கல் வைப்பது, உண்ணாவிரதம், பேரணி என நாங்கள் எத்தனை எதிர்ப்புகள் காட்டியும் எந்தப் பயனும் இல்லை. சி.எஸ்.ஐ. நிர்வாகம் காட்டி வரும் போலி ஆவணங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். மாரியம்மன் கோயிலை இடிக்கும் முயற்சிக்கு எதிராக மே 28-&ம் தேதி முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு மேலும் நடவடிக்கை இல்லை என்றால்... அதைப் பார்த்துக்கொண்டு ஆத்தா சும்மா இருக்கமாட்டாள்’’ என்றார் ஆவேச குரலில்.

மாரியம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் சொத்து பாதுகாப்பு கமிட்டி துணை மேலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ்குமாரிடம் பேசினோம் ‘‘இந்தப் பிரச்னைக்காக 1980&ல் இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே போல முந்தைய கலெக்டர் கருத்தையா பாண்டியன், நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தியதில் எங்களுக்கே வெற்றி கிடைத்தது. அதே போல முன்னாள் ஆர்.டி.ஓ. சுகந்தி முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் போதும் அவர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் இனி இது பற்றிய பேச்சு வார்த்தை தேவையற்றது என அவர் அரசுக்கு பரிந்துரை செய்தார். இப்படியிருக்க தற்போது அமையவுள்ள மேம்பாலத்தை காரணம் காட்டி மீண்டும் பிரச்னையைக் கிளப்புகின்றனர். 80 அடி சாலை என்பது அரசின் கட்டாய திட்டம் கிடையாது. எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த முத்துசாமி, இந்த வழியாக 80 அடி சாலை அமைத்தால் பயனளிக்கும் என பரிந்துரைத்தார். ஆனால் எங்கள் இடத்தில் இப்படி ஒரு திட்டம் நிறைவேற உள்ளதாக இதுவரை அரசு தெரியபடுத்தவில்லை. வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களை கர்த்தர் நிச்சயம் தண்டிப்பார்’’ என்றார் நிதானமாக.

மேம்பாலத்தை வைத்து மதமோதல் அபாயம் எழும் நிலைமை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலை கண்ணனிடம் கேட்டோம்.

‘‘பொது மக்களின் வசதிக்காகவும், போக்கு-வரத்து நெரிசலைக் குறைக்கவும்தான் பன்னீர் செல்வம் பார்க் அருகே புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாரியம்மன் கோயிலில் 15 அடி வரை இடிக்கப்படும் என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மாரியம்மன் கோயில் அருகே உள்ள சாலை 17.5 மீட்டர் மொத்த அகலம் உள்ளது. இதில் 13.2 மீட்டர் அகலத்தில் மட்டுமே பாலம் அமைக்கபடுகிறது. மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலையிலேயே தேவையான இடம் இருக்கும் போது, தேவையில்லாமல் கோயிலை யார் இடிப்பார்கள்? மேம்பாலத்தால் கோயில் நிலத்துக்கு எந்த சூழ்நிலையிலும் பாதிப்பு கிடையாது. இதைப் புரிந்துகொண்டு மேம்பாலம் அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தவறான தகவல்களை தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சாலைப் போக்குவரத்து, சமூகப் போக்குவரத்து இரண்டுக்கும் குந்தகம் ஏற்படாதவாறு மேம்பாலம் கட்டவேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1275&rid=68

No comments:

Post a Comment