புது தில்லி, டிச. 18: வலுவான மாநிலக் கட்சிகள் தங்கள் அணியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கூட்டணிப் பாதையிலேயே தொடர்ந்து செல்ல காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பிகாரில் தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ், அடுத்து வரும் ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களை தனியாகச் சந்திக்கத் தயங்குவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் காங்கிரஸ் மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற விவாதப் பட்டியல் நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
மத்தியிலும், மாநிலத்திலும் தனித்துப் போட்டியிடுவது என்ற திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படலாம் என்று மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியில் விரிசல்: இப்போதைய சூழ்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸýக்கு சுமுகமான உறவு இல்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தால் திமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.
இதேநிலை தொடர்வது தேர்தலின்போது கூட்டணிக்குப் பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வியூகத்தை தில்லி மாநாட்டில் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார், குஜராத் தோல்விகள்: சிறுபான்மை வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்து வருவது அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. பிகார் பேரவைத் தேர்தல், குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்து இருக்கிறது.
பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவே சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர். இதேபோல், குஜராத் உள்ளாட்சித் தேர்தலிலும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கே சிறுபான்மையினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அடுத்து வரும் தேர்தல்கள்: மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. அந்த மாநிலத்தில் இடதுசாரிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு திரிணமூல் காங்கிரஸ் முன்னேறி வருவது உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்தக் கூட்டணியே வெற்றிவாகை சூடும் என்பது எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடர்கிறது. எனினும், தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள அசாம், புதுச்சேரி மாநிலங்களில் பேரவைத் தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. அந்த மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கேரளத்தில் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றிவாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றிருப்பதால் பேரவைத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி. பேரவைத் தேர்தல்: காங்கிரஸின் முழுக் கவனமும் இப்போது உத்தரப் பிரதேசத்தின் மீது பதிந்திருக்கிறது. 2012-ல் அங்கு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ராகுல் காந்தி வகுத்த வியூகத்தின்படி அங்கு தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 22 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியது.
பிகார் படிப்பினை காரணமாக உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா என்ற கேள்வி காங்கிரஸ் தலைமைக்கு எழுந்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸýக்கு இப்போது 18 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களின் பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் சிறிய சறுக்கல்கூட காங்கிரஸýக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கூட்டணிப் பாதையையே காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.
www.dinamani.com
No comments:
Post a Comment