Monday, January 10, 2011

மறந்துடாதீங்க..! - சோனியாவுக்கு கருணாநிதி...

ன்றைய அலப்பறைக் கூட்டம் நீதி வேண்டி போராடிய கண்ணகி சிலை அருகே கூடியது. கடற்காற்று வீச காலாற நடந்து இளைப்பாறவும் வசதி என்ற ஏற்பாடு.ஆனால் தொடக்கமே தொங்கலில் ஆரம்பமானது. நம்ப சுவருமுட்டி சுந்தரமும்,கோட்டை கோபாலும் உடல் முழுக்க காயக்கட்டோடு நொண்டியடித்து வந்ததைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி.
''சுவருமுட்டி, என்னய்யா ஆச்சு. அண்ணா சமாதியில 'ஸ்டேட் ஆட, சென்ட்ரல் ஆட'ன்னு நிகழ்ச்சி நடத்தின... போலீஸ் புடிச்சுகிட்டுப் போய் இப்படி ஒரேடியா ஆடிட்டாங்களோ'' என்றார் சித்தன்.
''அட, அது இல்லப்பா... இது வேற...ஆனால் இதுவும் போலீஸ் அடிதான்.சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டாய்ங்க.
"அப்படி என்ன தப்பு பண்ணினே.?"
"ஒண்ணுமில்ல சித்தா..நமக்கு வேண்டிய பையன். 500 ரூபாய் பிக்பாக்கெட் அடிச்சான்னு சந்தேகம்தானாம்.போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டுபோய் ஜட்டியோட வச்சு உரிச்சுட்டாங்க.தகவல் கிடைச்சுப் போனேன்.'என்னய்யா இப்படி செய்துட்டீங்கன்னு நியாயம் கேட்டேன். திருடினவன்கிட்ட பிறகு எப்படி விசாரிக்கிறதாம். துரையை விருந்து வச்சு விசாரிக்கச் சொல்றாரோன்னு நக்கலடிச்சாங்க.."
"நீங்க செய்யுறது ரொம்ப தப்பு. நம்ப பிக்பாக்கெட் ஆளு வீட்டுக்கு போய் முதல்ல சோதனை போடணும். அப்படியே அவரோட நண்பர்களின் வீடு அலுவலகம் எல்லாம் போய் சோதனை போடணும். கிடைச்ச ஆதாரத்தை எடுத்கிட்டு வந்து நீங்க புலனாய்வு விசாரணை நடத்தணும். அவருதான் குற்றவாளின்னு தெரிஞ்ச பிறகு விசாரணைக்கு வரச்சொல்லி நோட்டீஸ் அனுப்பணும்.
அந்த நோட்டீஸ் வந்தவுடனேயே எங்காளு பெரிய ஆஸ்பிட்டல் போய் மெடிக்கல் செக்கப்புன்னு சர்டிபிகேட் வாங்கி வச்சுக்குவாரு. அப்புறமா உங்க ஸ்டேஷனுக்கு வருவாரு. அதுக்கு முன்னாடி மீடியாவை எல்லாம் நீங்களே கூட்டியாந்து வச்சிக்கிடணும். எங்காளு 'நான் தைரியமாதான் விசாரணைய எதிர்கொள்ள போறேன்னு சவால் விடுவாரு. இம்புட்டுக்கும் பிறகுதான் நீங்க அவர்கிட்ட பணிவா கேள்விகளை கேட்கணும். பிக்பாக்கெட் ஆளு இடையில அவரோட வக்கீல்கிட்ட ஆலோசனைய கேட்பாரு. டாக்டர்கிட்டவும் பேசுவாரு. அதுக்கு அனுமதிக்கணும். எந்த விதத்திலேயும் அவரோட மனித உரிமைய நீங்க பறிக்கக் கூடாது..."
"அடடே.. ரொம்ப நல்லாத்தான் போவுது. அப்புறம்."-சித்தன்
"அப்புறமென்ன.. எங்காளுக்கு வீட்டு சாப்பாட்டைத்தான் நீங்க அனுமதிக்கணும். உங்க சாப்பாட்டை நம்ப முடியாது. எங்காளுக்கு எதிரான தாதா யாராச்சும் உங்களோட ஊடுருவி ஏதாச்சும் செய்துட்டா... அதனாலதான் வீட்டு சாப்பாட்டு. அதையும் எங்காளேதான் ஒரு எட்டு நடந்து போய் எடுத்துகிட்டுவர நீங்க அனுமதிக்கணும்..
அப்புறம் ரொம்ப டையாடா இருக்கு.இதுக்கு மேல ஒத்துழைக்க வாய்ப்பில்லேன்னு சொல்லுவாரு. சரி போய்ட்டு வாங்க ராசான்னு மரியாதையா அனுப்பி வைக்கணும். அடுத்த நாள் நீங்க வேலை வெட்டிய விட்டுட்டு அவருக்காக காத்துகிட்டு இருக்கணும்.வழக்கம் போல வருவாரு.நீங்களும் வழக்கம் போல விசாரிக்கணும்.அன்னைக்கும் விசாரணை முடியாம மூன்றாவது நாளும் வாங்கன்னு கேட்டுக்கணும். எங்காளு, ஏற்கனவே டாக்டர்கிட்ட வாங்கின மெடிகல் ரிப்போர்ட்டை காட்டி 'எனக்கு தைராய்டு பிரச்சனை இருக்கு. அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும். பதினைஞ்சு நாளைக்கு என்னை டிஸ்டப் பண்ணவே கூடாதுன்னு கேட்டுக்குவாரு. சரி போய்ட்டு வாங்க ராசான்னு அனுப்பி வைக்கணும்'' என்றெல்லாம் பிக்பாக்கெட் ஆளோட மனித உரிமைய சொன்னேன்...
"அதுக்கு போலீஸ் என்ன சொன்னாங்க?"- சித்தன்
''ஐநூறு ரூபாய் கேசுக்கெல்லாம் அப்படியெல்லாமா செய்ய முடியும்னு கிண்டலடிச்சாய்ங்க.'சரி ஒரு லட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடி அடிச்சா..'. ன்னு கேட்டுட்டேன். இப்படி கட்டு போடுற அளவுக்கு பிரிச்சு மேய்ஞ்சுட்டாய்ங்க..." பாவமாக சொன்னார் சுவருமுட்டி..!
"உனக்கு ரொம்பவும் குறைச்சலாதான் கொடுத்திருக்காய்ங்க..." என்று கலாய்த்த சித்தன்,கோபாலைப் பார்த்து "உனக்கு எப்படிய்யா அடி!?" என்றார்.
"என் கதை வேறய்யா. நம்ப முதல்வர் ஐயா வைரமுத்துவோட புத்தக வெளியீட்டு விழாவுல கலந்துகிட்டு என்ன பேசினாரு தெரியுமா.?" - கோபால்
"அவர் பேசினது தெரியும். உனக்கு நடந்ததைச் சொல்லுய்யா"-சித்தன்
"நடந்ததை அப்படியே சொல்லிடறேன். 'இந்த விழாவில் வைரமுத்துவை பாராட்ட நான் வரவேண்டும் என்று அழைக்கப்பட்ட போது எனக்கு ஒரு மிக முக்கியமான வேலை வந்தது. விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை. அது முதல்வரின் கடமை. அதற்கு செல்லாமலே இங்கு வந்துவிட்டேன் என்றால் அதற்கு என்ன பொருள்.? நான் முதல்வராக இருக்கலாம்.ஆனாலும் ஒரு முதல்வரைவிட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றுல்ல. என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமை தரக்கூடியவன். சேர மன்னன் கணைக்கால் இரும்பொறையின் அரண்மனைக்கு சென்றார் தமிழ் புலவர் மோசு கீரனார். பயணக் களைப்பால் அரண்மனை வாசலில் இருந்த முரசு கட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்டார் புலவர். வாயிற் காப்போன் மூலம் இதை அறிந்து கோபத்துடன் வந்து பார்த்த மன்னன், முரசு கட்டில் படுத்திருப்பது தமிழ் புலவன் என்பதை அறிந்தான். உடனே அவருக்கு விசிறியால் வீசினான். இதைக்கண்ட பதற்றத்துடன் எழுந்த புலவரிடம், உங்களுக்காக அல்ல இது. நான் தமிழுக்கு ஆற்றும் தொண்டு என்றார். அதைப் போலத்தான், இங்கே பிரதமர் வருகிறார் என்றாலும்கூட அங்கே செல்லாமல் இந்த 'மன்னன்'இங்கே வந்ததற்கு காரணம் தமிழுக்கு செய்யும் தொண்டு, தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதை நான் கூற விரும்புகிறேன்' என்று மன்னர் ஐயா, இல்லை கலைஞர் ஐயா பேசினார் இல்லையா..."
"ஆமாம்யா. பேசினார்தான். இப்போ அதற்கு என்னவாம்."-சித்தன்.
''நானும் கோபாலபுரத்தில் இருக்கிற மன்னர் வீட்டாண்டே போனேன். புலவர் மோசு கீரனார் மாதிரி படுத்து தூங்கினா கலைஞர் வந்து விசிறி விடுவார்னு நினைச்சு படுத்தேன். செக்யுரிட்டிங்க வந்தாய்ங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சாய்ங்க. நானும் ஒரு புலவர்தான்னு, எழுதின கவிதைய எல்லாம் காட்டின பிறவும்கூட நம்பல. உங்கவீட்டு அடி, எங்கவீட்டு அடியில்ல.. தர்ம அடின்னு சொல்லுவாய்ங்களே... அப்போதான் அனுபவிச்சேன்...''அய்யயோவென்று அழுதபடியே சொன்னார்.
"நல்லவேளை அதோடு விட்டுவிட்டார்களே. மெண்டல்னு சொல்லி கீழ்பாக்கம் ஆஸ்பிட்டல்ல போய் சேர்த்துட்டு ஆறு மாசத்துக்கு வெளிய விடாதீங்கன்னு சொல்லாம விட்டாங்களேன்னு பெருமைப்படுய்யா" என்று கிண்டலடித்தார் அன்வர்பாய்.
''சரி நான் அரசியல் மேட்டருக்கு வாறேன். பிரதமரை வரவேற்கப் போகாம முதல்வர் அப்படி பேசினது காங்கிரஸ் பிரமுகர்களை கொதிப்படைய வச்சிருக்காம்.நம்ப குடைச்சல்காரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'பிரதமரை முதல்வர் வரவேற்காம விட்டதைப் பற்றி கவலையில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் ரொம்ப லொள்ளு.பதிலுக்கு நாங்க செய்ய ஆரம்பிச்சா தாங்க மாட்டார்கள். எனக்கு முதலமைச்சர் பதவியெல்லாம் முக்கியமில்ல.தமிழ்தான் முக்கியம்னு கருணாநிதி தமிழ் வளர்க்க போனால் நன்றாக இருக்கும். ஒரு பிரதமரைவிட புலவர்தான் முக்கியம் என்று கூறிய உங்களுக்கு எதுக்கு அரசியல், அதிகாரம்? எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு அன்னைத் தமிழ் வளர்க்க போக வேண்டியதுதானேன்னு' காட்டமா கேட்டிருக்காரு. ஆயிரம் 'கை'கள் தடுத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை என்பது இளங்கோவனுக்குதான் பொருந்தும்'' என்று சிரித்தார் கோபால்.
"இன்னொரு குடைச்சலையும் சொல்றேன் கேளுங்க. பொங்கல் திருவிழாவுக்கான இலவச பொருட்களை வழங்கும் விழா பல்லாவரத்தில் நடந்தது.முதல்வர் கலந்துகிட்ட அந்த விழாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. யசோதா திமுகவின் சாதனைகளை சும்மா அள்ளிவிட்டார். இந்த அம்மாவுக்கு நம்ப கட்சியில எப்ப கொள்கை பரப்பு செயலாளர் பதவிய கொடுத்தோம்னு கலைஞருக்கே சந்தேகம். அப்படி புகழ் பாடினார் யசோதா. அடுத்து பேசவந்த கலைஞர் 'எங்க கட்சியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனே பெண் வேடமிட்டு வந்தது போல,இந்த அரசின் சாதனைகளை யசோதா எடுத்துச் சொன்னார். சொல்வார். எதிர்காலத்திலும் அதைச் சொல்வார்.இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவது சிலருடைய பழக்கம். ஆனால் பெண்களுக்கு அந்த மறதியில்லை. அப்படி அதை மறந்து பேசினால் அவர்கள் பெண்களே இல்லை' என்று எங்கேயோ தாக்கி பேசினார். ஆனால் அவர் பேசுவது சத்தியமாக ஜெயலலிதாவை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்''என்ற சுவருமுட்டியை இடைமறித்த சித்தன்"யோவ் யாரைச் சொன்னார்னு தெளிவா சொல்லேன்யா. தலை வெடிச்சுடும் போல இருக்கு" என்றார்.
''தலைவரு சுத்தி வளைச்சு சோனியாவைத்தான் அப்படி போட்டு தாக்கியிருக்காரு.'அன்னை'யோட கூட்டணி உறவுக்காக ஈழப் பிரச்னையில் ஒரு லட்சம் தமிழ் மக்கள் படுகொலையானது வரைக்கும் எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கோம். அதையெல்லாம் அம்மையார் மறந்துடக்கூடாது. அப்படி மறந்துட்டா அவர் பெண்ணே இல்லைன்னு சொல்றாரு. காங்கிரஸுக்காக வேண்டி வைகோ, சீமான், நெடுமாறன்னு பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ள வச்சேன்.அதையும் மறந்துடுவாய்ங்களா என்னன்னு கேட்கிறாரு.யாருக்கு புரியுதோ இல்லையோ அந்தம்மாவுக்கு புரியணும்னு சொல்றாரு. இதுக்கு மேலயும் கூட்டணி உறவை முறிச்சுகிட்டா என்னால தாங்க முடியாது. அழுதுடுவேன்னு மறைமுகமா அறிவுறுத்துறாரு. கலைஞர் சொல்லவந்த சேதி இதுதான்னு மூத்த காங்கிரஸ் ஆளுங்க நல்லாவே புரிஞ்சுகிட்டு 'அய்யோன்னு' சிரிக்குறாய்ங்க'' என்றார் சுவருமுட்டி..!
"சரி எம்புட்டு அடிச்சாலும் அசரமாட்டோம்னு சொல்ற சேதி தெரியுமா? ஸ்பெக்ட்ரம் ஊழல்னு சொல்லி என்னதான் சி.பி.ஐ.விசாரணை நடத்தினாலும்,குடைச்சல் கொடுத்தாலும் நாங்க அசரமாட்டடோம்னு நம்ப ஜகத் கஸ்பர் சொல்றாரு.அவரும் கனிமொழியம்மாவும் சேர்ந்து சங்கமம் விழாவை படு அமர்களமா நடத்தப் போறதா சொன்னாங்க. அதுக்கு நம்ப தமிழ்நாடு அரசும் சுற்றுலாத் துறை மூலமாக நான்கு கோடி ரூபாய் கொடுக்கப் போறதா பட்டைய கிளப்பினாங்க.கடந்த வருஷத்தைவிட இந்த வருஷம் இன்னும் சூப்பரா நடத்தப் போறம்னு பில்டப் பண்ணாங்க. ஆனா அதுக்கம் உலை வச்சுட்டாங்க நம்ப 'தமிழக மக்கள் உரிமை கழகத்தை' சேர்ந்தவங்க"- சித்தன்.
"ஏன் என்னாச்சு. அந்த சங்கமம் விழாவுல சி.பி.ஐ. ரெய்டு மாதிரியும் நடனம் ஆடச் சொல்றாங்களோ?"- முந்திக்கொண்டு கேட்டார் சுவருமுட்டி
''அப்படி ஆடச் சொன்னாலும் பரவாயில்ல. நல்லாவே ஆடிடுவாங்க. ஆனா விஷயமே வேற. பாதர் ஜகத் கஸ்பர் மேல ஸ்பெக்ட்ரம் ஊழல் கறை படிந்திருக்க அதனாலதான் சி.பி.ஐ வந்து ரெய்டு நடத்தியிருக்கு. அந்த விசாரணை இன்னும் முடியல.அதுக்கு முன்னாடியே அவர் தலைமையில் நடக்கிற சங்கமம் விழாவுக்கு அரசு பணத்தை நான்கு கோடியை தூக்கி கொடுக்கிறது தப்பு. அரசாங்கம் அப்படி செய்யக்கூடாதுன்னு சென்னை உயர் நீதிமன்றத்துல ஒரு வழக்கு போட்டிருக்காங்க. குற்றம் சுமத்தப்-பட்டிருக்கிற ஒரு நிறுவனம் நடத்துற விழாவுக்கு கெவர்மெண்ட் அவ்வளவு தொகையை கொடுக்கலாமான்னு பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கு. அது மட்டுமல்ல நம்ப மதுரைக்காரர் அழகிரி அண்ணன் இருக்காரு இல்ல. அவரும் கனிமொழி, ஜகத் கஸ்பருக்கு எதிரா கொடி பிடிக்கிறாரு. முதலில் ராசாவையும், கனிமொழியையும் கட்சியை விட்டு நீக்குங்கன்னு அடம் பிடிக்கிறாரு. இந்த லட்சணத்துல கனிமொழி முன்ன நிக்குற சங்கமம் விழாவுக்கு நான்கு கோடியை தூக்கி கொடுக்கிற தகவல் கிடைச்சதும் செம கடுப்புல இருக்கிறாரு" என்றார் சித்தன்.
"கடைசியா நான் ஒரு விஷயத்தை சொல்றேன். 'முதல் நாள் முறுக்கிக்கிட்டு தமிழ்தான் முக்கியம்ணு விமான நிலையம் போகாம அடுத்த நாள் கவர்னர் மாளிகைக்கு போய் பிரதமரை சந்தித்தார் கலைஞர்.அப்போ கூட்டணி பத்தி என்கிட்ட எதுவும் வேணாம் சாமி. அதை நீங்க சோனியா அம்மாகிட்டதான் பேசணும்னு கண்டிப்பா சொல்லிட்டாராம் பிரதமர்.பிறவுதான் வேற வழியில்லாம 'வெள்ள நிவாரண நிதி' பற்றி பேசிட்டு வந்தாரு. அப்படி வந்தப்போ வெளிய மீடியா ரொம்ப ஆவலா கேட்ட நினைச்ச 'திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவு' பற்றி கேட்டாங்க. அதுக்கு 'உங்களுக்கும் எனக்குமான உறவு எப்படியோ அப்படித்தான்'னு கலைஞரு பதில் சொன்னதுதான் பெரிய சிக்கலா இருக்கு.அதாவது பத்திரிகைகாரர்களுக்கும் அவருக்கும் அம்புட்டு நல்ல உறவாம். பிரிக்க முடியாத பிடிப்பாம். எந்த பத்திரிகைகாரனுக்கு, எந்த காலத்தில் அவரை பிடிச்சிருக்கு? அந்த மாதிரிதான் திமுக-காங்கிரஸ் உறவுன்னு சொல்லாம சொல்கிறாரோன்னு மீடியாக்காரர்களுக்கு குழப்பம். தெனமும் டாஸ்மாக் தண்ணி அடிக்கிற எனக்கே தலைசுத்திப் போச்சுது. பாவம் பத்திரிகைகாரர்கள் அந்த குழப்பத்தில் ரொம்ப நேரமா வழி தெரியாம கவர்னர் மாளிகையிலேயே சுத்திகிட்டு இருந்திருக்காங்க. இந்தப்பக்கம் என்னடான்னா அறிவியல் மாநாட்டுக்கு வந்த பிரதமர் 'திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்பவும் போல் உறுதியா இருக்குன்னு சொல்றாரு.என்ன மாதிரி உறுதின்னு நம்ப ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்-கிட்டதான் கேட்டு சொல்லணும்னு சொல்லாம சொல்றாரு போல. ஏம்பா சித்தா உனக்கு ஏதாவது புரியுதா..'' என்று அப்பாவியாக பார்த்தார் சுவருமுட்டி.!!
"உன் சந்தேகத்தை போக்க ஒரு அறிவிப்பு செய்யலாம் 'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் முதல்வர்- பத்திரிகையாளர்கள் உறவு எப்படின்னு சரியா சொல்றவங்களுக்கு ஆயிரம் திருவோடு பரிசா கொடுக்கப்படும். அடுத்ததா நம் ஜனங்களுக்கு அதுதான் டிமாண்ட் பொருளா இருக்கும். அதனால சரியான பதிலைச் சொல்லி இப்பேவே வாங்கி வச்சிக்கிடுங்கோ'ன்னு சொல்லிடலாம். இதோ சொல்லிட்டேன்..." என்றபடியே எழுந்தார். சபை கலைந்தது.
- பா.ஏகலைவன்.

http://www.kumudam.com/dotcom/muchandi/index.php?type=muchandi&pag=1

No comments:

Post a Comment