Saturday, January 15, 2011

இலவசம் என்கிற தூண்டில் - ஏமாற தயாராகும் மக்கள்


தமிழகத்தில் ஏழைகள் இருக்கும்வரை
இலவசங்கள் தொடரும் - தமிழக முதல்வர்


இலவசத்தை நம்பும் தமிழன்!

ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று' என்பதை ஏட்டில் படித்தவர்கள் தமிழர்கள். அதனாலோ என்னவோ, அவர்கள் தாவெனக் கேட்கும் முன்பே எதையும் இலவசமாகக் கொடுத்துவிட வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துவிட்டதுபோலும்.

பல்வேறு பொருள்களை அரசு இலவசமாய் வழங்கிக் கொண்டிருக்கிறது. இலவசங்கள் தொடரும் என அண்மையில் தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளார்.

அதன் வெளிப்பாடாய், "என்ன கொடுப்பார், எவை கொடுப்பார்?' என தமிழக மக்கள் எண்ணும் முன்னே "டிவி, மின்சாரம், மோட்டார், வேட்டி, சேலை என பலவும் கொடுப்பேன். போதாது போதாதென்றால் இலவசப் பொங்கல் பொருள்களும் கொடுப்பேன்' என வரிந்துகட்டிக் கொண்டு, தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு ஏழைகள் பொங்கல் வைத்து உண்டு மகிழ, இலவசப் பொங்கல் பொருள்கள் உண்டு எனத் தமிழக அரசு அறிவித்தது.

அரைக் கிலோ பச்சரிசி, 100 கிராம் பாசிப்பருப்பு, அரைக் கிலோ வெல்லம், முந்திரி 10 கிராம், உலர் திராட்சை, ஏலக்காய் தலா 5 கிராம் ஆகியவை அடங்கிய பையை இலவசமாகப் பெறலாம் என்றது அரசு.

"நாளொரு பொருள், பொழுதொரு விலை' என விலை உயர்வு பாதித்து விழி பிதுங்கிக் கொண்டிருப்பதால், இப்படி ஏதேனும் இலவசமாய் கிடைத்தால்தான் தைப் பொங்கலையும் கொண்டாடிக் களிக்க முடியும் என்ற நிலை என்பதால் ரேஷன் அட்டை தமிழர்களும் பொங்கல் பொருள்களை எதிர்பார்த்திருந்தனர்.

இம் மாதத்தின் முதல் தேதியிலிருந்து பொருள்களை பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் அனைத்து நாள்களிலும் பெறலாம் என அரசு அறிவித்தது. முதல் நாளில் தமிழகம் முழுவதும் முதல்வரும், அமைச்சர்களும் இலவசப் பொருள்கள் விநியோகத்தைத் தொடங்கிவைத்தனர்.

அன்றைய தினம் பொருள்கள் அனைத்தும் தரமாக இருந்ததால் தொடர்ந்து வரும் நாள்களிலும் அதே தரத்தில் பொருள்கள் கிடைக்கும் என நினைத்திருந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் பொருள்களின் தரம்.

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு எப்போதேனும் 2 கிலோ பச்சரிசி வழங்கப்படும். அவை பெரும்பாலும் பழுப்பு நிறத்திலேயே இருக்கும். இலவசப் பொங்கல் பையிலிருந்த பச்சரியும் அதே நிறத்திலும், தரத்திலும்தான் இருந்தது. ஆனால், இம் முறை பச்சரிசி சற்று உயிர்ச்சத்துடன் இருந்தது எனலாம் (உபயம்-பச்சரியில் மேய்ந்துகொண்டிருந்த சின்னச்சின்னப் பூச்சிகள்).

மந்திரிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கொடுக்கப்பட்ட இலவச பைகளில் முந்திரி பாக்கெட்டுகள் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அதன் பின்பு வழங்கப்பட்ட பைகளில் முந்திரிகள் ஒன்றிரண்டு கிராம்வரை குறைந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், பெரும்பாலான பாக்கெட்டுகளில் முந்திரிகளைக் காணவே முடியவில்லை. விற்பனையாளர்களின் மற்றுமொரு கைவண்ணம்தான் என பொதுமக்கள் புலம்புவதைக் கேட்க முடிந்தது.

இலவசப் பொருள்களில் வெல்லத்தைப் பொறுத்தவரை மக்களின் கஷ்டத்தை அரசு சிறிது குறைத்திருந்தது எனக் கூற வேண்டும்.

பொங்கல் வைக்கும்போது வெல்லம் உடைக்க கடினமானதாக இருந்தால், மக்கள் சிரமப்படலாம் என நினைத்து, திட நிலையிலும் இல்லாமல் திரவ நிலையிலும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள வெல்லத்தை அரசு வழங்கியிருந்தது.

இதற்காக வெல்லத்தை அரசு மொத்தமாய் கொள்முதல் செய்யத் தொடங்கியதால் தமிழகம் முழுவதும் வெல்லத்தின் விலை திடீரென உயர்ந்தது.

இதுகுறித்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. இலவச வெல்லத்தால் வெளிச்சந்தையில் வெல்லம் விலை உயர்ந்ததுதான் மிச்சம்!

ஆனால், அரைக்கிலோ பச்சரியை பொங்கல் வைத்தால் தெருவுக்கே மணக்க வேண்டும் என 0 ஏலக்காய்கள்வரை (5 கிராம்) வழங்கப்பட்டிருந்தது சிறப்பு.

இலவசப் பொருள்களில் உருப்படியாய் எதுவுமேயில்லையா எனக் கேட்போருக்கு இல்லை என பதில் சொல்லவைக்காதவண்ணம் உருப்படியாய் இருந்தது பாசிப்பருப்பு மட்டுமே. ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்பார்கள், இங்கு ஆறுக்கு ஒன்று பழுதில்லை எனத் திருப்திபட்டுக் கொள்ளலாம். இதற்கிடையே, இந்தப் பொருள்கள்கூட பலருக்கும் கிடைக்காத நிலை. நியாயவிலைக் கடைக்கு இலவசப் பொங்கல் பைக்காக சென்றால், அதிக பணிப்பளு (?) காரணமாக விற்பனையாளரின் பதிலோ "இன்று போய் நாளை வாராய்!' என்பதாக இருந்தது. ஒருவேளை, "பையக் கொடு, பையக் கொடு' எனக் கேட்டதால் அவசரமில்லாமல் கொடுத்தால் போதும் என அவர் நினைத்திருக்கலாம்.

அதையும் மீறி இலவசமாய் இப் பொருள்களைப் பெற்றுவிட்டனர் என்பதற்காக, ஊதியம் உயர்ந்துள்ள கொத்தனார் தொடங்கி ஏழை, எளியோர், அன்றாடங்காய்ச்சிகள், நடுத்தர மக்கள் தங்கள் கூலியையும், ஊதியத்தையும் சேமித்து வைத்துவிடவில்லை. ஏனெனில், காய்கனிகளின் விலை அப்படி!

வழக்கமாக காய்கனிகளின் விலை இப்படித்தான் எனச் சமாதானப்படுத்திக்கொண்டு, அரசு இலவசமாக வழங்காவிட்டாலும்கூட பொதுமக்களே சிரமப்பட்டு காய்கனிகளை வாங்கி பொங்கலைக் கொண்டாடிவிடலாம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும் கரும்புக்கும், மஞ்சள் குலைக்கும் என்ன நேர்ந்தது? விலை, கடந்த ஆண்டைப்போல பல மடங்கு. மஞ்சள் குலையின் விலையே ஈரல்குலையை நடுங்க வைத்தது என்றால் மற்றவற்றை என்ன சொல்ல!

இலவசங்களில் பல குறைகள் இருக்கலாம். ஆனால், அரசு வழங்கிய டி.வி.க்காக தனியாருக்கு மாதந்தோறும் ரூ. 150 செலுத்தி நாம் பார்க்கப்போகும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு எந்த சேனலிலும் குறைவிருக்காது.

தமிழ் தெரியாத நடிக, நடிகையரின் "பொங்கள் வாள்த்துகளை' நாள்முழுவதும் ரசிக்கலாம்; உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகத் திரைக்கு வந்தேயிராத திரைப்படங்கள் பலவற்றையும் பார்க்கலாம். விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விழி பிதுங்கினாலும் டிவி நிகழ்ச்சிகளை வாய் பிளந்து பார்த்து மகிழலாம்.

பின்னே, சும்மாவா சொன்னார் கவிஞர் ""தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு'' என்று?

www.dinamani.com

No comments:

Post a Comment