Thursday, January 13, 2011

அ.தி.மு.க., – தே.மு.தி.க., விறு விறு பேச்சுவார்த்தை: சூடாகிறது தேர்தல் களம்

தமிழக அரசியல் களத்தில் பொதுத்தேர்தல் காற்று வீசத் துவங்கி விட்டது. கூட்டணிகள் எப்படி மாறும் என்பதில் துவங்கி, யாருக்கு எத்தனை இடம், எப்படி அணி, எப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி பெறும் என்றெல்லாம் கூட்டல், கழித்தல் கணக்குகள் அரசியல் வட்டாரத்தில் போடத்துவங்கி விட்டனர். தேர்தலை கருத்தில் கொண்டு, ஜாதிக்கட்சிகளும் உயிர்பெறத் துவங்கி விட்டன.

தி.மு.க.,வைப் பொறுத்தவரையில், காங்கிரசின் தோழமையை மட்டும் வைத்து தேர்தலை சந்திக்க தயார் என்ற நிலையில் உள்ளது. இடைத்தேர்தல்களின் பயன்படுத்திய வெற்றி பார்முலாவும், அரசின் சாதனைகளும் தங்களின் வெற்றிக்கு துணையாய் இருக்கும் என்பது தி.மு.க., தலைமையின் எண்ணமாக உள்ளது. தேர்தல் களத்தை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுக்க வேண்டிய நிலையில் அ.தி.மு.க., உள்ளது. “தி.மு.க.,வை ஒழிப்பதே என் முதல் வேலை’ என விஜயகாந்த் திடீர் சபதம் எடுத்துள்ளது அ.தி.மு.க.,விற்கு நம்பிகையை கொடுத்துள்ளது. எப்படியும் அ.தி.மு.க., – தே.மு.தி.க., கூட்டணி அமைந்து விடும் என்பதை உறுதிப்படுத்துவது போல் இந்த பேச்சு அமைந்துள்ளது. இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதை ஜெயலலிதாவே, விஜயகாந்தோ இதுவரை மறுக்கவில்லை.

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்தால், வெற்றி உறுதி என்ற கருத்து தொடர்ந்து அ.தி.மு.க., தலைமைக்கு பல்வேறு ஆலோசகர்களால் சொல்லப்பட, கூட்டணியை உறுதிப்படுத்தும் இறுதிக்கட்ட பணி தீவிரமாகியுள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போதே, “எங்கள் கட்சிக்கு 15 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. எனவே, 80 முதல் 100 சீட்டுகளை ஒதுக்க வேண்டும்’ தே.மு.தி.க., நிபந்தனை விதித்துள்ளது. அவர்கள் கேட்கும் அளவுக்கு இடங்களை ஒதுக்க முடியாது என்றாலும், கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதே அ.தி.மு.க.,விற்கு தெம்பினை கொடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலமாக, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. “உங்களுடன் கூட்டணி சேர வேண்டிய நிர்பந்தம் எதுவும் எங்களுக்கு இப்போது இல்லை. நாங்கள் தனித்து நின்றாலும், ஓட்டு வங்கி குறையாது. நாங்கள் பிரிக்கும் ஓட்டுக்கள் உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்தும். எனவே, யோசித்து முடிவு சொல்லுங்கள்’ என அடுத்த வாதத்தை தே.மு.தி.க., முன்நிறுத்தியுள்ளது. பல கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தையில், 50 தொகுதிகளுக்கு கீழேயே அ.தி.மு.க., நின்றுள்ளது. ஆனால், “ஐம்பது தொகுதிக்கு மேல் கொடுப்பதாக இருந்தால்தான், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை’ என தே.மு.தி.க., உச்சியில் ஏறிக் கொண்டுள்ளது.100 சீட்டில் பேச்சைத் துவங்கினால்தான், 50ல் முடிப்பார்கள் என்ற கணக்கில் தே.மு.தி.க., வின் காய் நகர்த்தல்கள் உள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: அ.தி.மு.க., வைப் பொறுத்தவரை 144 தொகுதிகளில் தாங்கள் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு வைக்கும் திட்டத்தையும் தற்போது தயாரித்துள்ளது. தே.மு.தி.க., கூட்டணியில் சேர்வது உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு 45 தொகுதிகளும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 15 தொகுதிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,விற்கு 25 தொகுதிகளும், உதிரிக் கட்சிகள், ஜாதிக்கட்சிகளுக்கு என ஐந்து தொகுதியும், “ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளது.

இதில், தே.மு.தி.க., முரண்டு பிடிக்குமானால், ம.தி.மு.க.,விடம் இருந்து ஐந்து தொகுதிகளை பறித்து, 50 தொகுதிகளை தே.மு.தி.க.,விற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த முறையும் ம.தி.மு.க.,வின் தன்மானம் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றே தோன்றுகிறது. பொதுத்தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் அந்த கட்சிக்கு எழும் வாய்ப்பு உள்ளது. அப்படி ம.தி.மு.க., வெளியேறும் பட்சத்தில், பா.ம.க.,விற்கு வலை போடவும் அ.தி.மு.க., தயாராக உள்ளது. தே.மு.தி.க., தரப்பிலும் அதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றையும் விட, காங்கிரஸ் கூட்டணிக்கான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், மொத்த கூட்டணிக் கணக்கும் மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://senthilvayal.wordpress.com

No comments:

Post a Comment