Saturday, January 15, 2011

என்னை கடலில் போட்டாலும், நான் தொல்லை கொடுப்பேன்-கருணாநிதி

தமிழர்களே, தமிழர்களே நீங்கள் கருணாநிதியின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கிப் போட்டாலும், அவர் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்.

அதற்கு உதாரணமாக மதுரை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா சொன்ன தீயசக்தி கருணாநிதியின் கதை.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு ஒரு மெல்லிய நீரோடையாக ஊருக்கே உழைக்க வேண்டும் என்கிற ஊழியச் சிந்தனையோடு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும்; அவருக்குப் பின் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவும்; மூதறிஞர் ராஜாஜியும்; பெருந்தலைவர் காமராஜரும்; பெரியவர் பக்தவத்சலமும்; அவருக்குப் பின் பேரறிஞர் அண்ணாவும்; அதன் பின் பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும்; அதற்குப் பின் நானும் தமிழகத்தை ஆண்ட போது, இந்தத் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் பின்னோக்கிப் பாருங்கள். இதை விளக்குவதற்கு ஒரு கதையை இங்கே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர். அந்த கிராமத்திற்கு யார் செல்ல வேண்டுமானாலும் அல்லது அந்த ஊர் மக்கள் மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் பரிசல் மூலம் தான் பயணம் செய்ய முடியும். தினமும் காலையில் ஒரு பரிசல்காரன் அந்த கிராமத்தில் இருந்து பரிசல் ஓட்டி தன் பரிசலிலே ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு போவான்.

அது போல இருட்டுவதற்கு முன்பு மாலை 6 மணி அளவில் அதே பரிசல் ஓட்டி அக்கரையில் இருந்து அந்தக் கிராமத்திற்கு பரிசலை செலுத்துவான். அப்படித் தான் ஒரு நாள் பரிசலோட்டி பரிசலை கொண்டு வந்து நிறுத்தி ஆட்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு இருந்தான். அந்தக் கிராமத்தில் இருந்து வெளியூருக்குச் சென்று விளக்குமாறு விற்கும் பெண் ஒருத்தி தான் விற்றது போக மிச்சம் உள்ள விளக்குமாறு கற்றைகளை கையில் பிடித்துக் கொண்டு பரிசலில் ஏறி அமர்ந்தாள். அவள் அருகே குரங்கு வித்தை காட்டும் ஒருவன் குரங்கோடு பரிசலில் ஏறி அமர்ந்தான். அது போலவே பாம்பாட்டி ஒருவனும் கூடை நிறைய பாம்புகளை வைத்துக் கொண்டு பரிசலில் ஏறி உட்கார்ந்தான். இது போல அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பரிசலில் அமர்ந்துவிட்டார்கள். பரிசல் புறப்பட தயாரானது.

அப்போது ஒருவன் ஓடி வந்து பரிசலிலே ஏற முயற்சித்தான். ஆனால் பரிசல்காரன் அவனை ஏற்ற மறுத்து "ஒழுங்காக போய்விடு. உன்னை ஏற்ற முடியாது" என்று மறுத்தான். அவனோ, நானும் ஏறிக்கொள்வேன் என்று அடம் பிடித்தான்.

பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் பரிசல் ஓட்டியிடம், அவனும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் தானே? உனக்குரிய கூலியைத்தான் தருகிறானே? அவனை ஏற்றிக் கொண்டால் என்ன? என்று கேட்டார்கள்.

உடனே பரிசல்காரன் சொன்னான் "அய்யோ, உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது. கொடூர புத்தியும் எந்நேரமும் பிறருக்கு தீங்கு செய்யக்கூடிய விஷமச் சிந்தனையும் கொண்ட மோசமான தீயசக்தி அவன். பரிசல் இங்கிருந்து ஊர் போய்ச் சேருவதற்குள் எதையாவது செய்து நமக்கு ஆபத்தை விளைவித்துவிடுவான். நீங்கள் அவனுக்கு ஆதரவாக பேசாதீர்கள்" என்று மன்றாடினான்.

ஆனால், அந்தப் பரிசலில் இருந்த கிராமத்துக்காரர்கள் "உனக்கு அந்த பயம் வேண்டாம். நாங்கள் வேண்டுமானால் அவனது கையையும் காலையும் கட்டி பரிசலிலே போட்டு விடுகிறோம். அவனால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. நமது பயணத்திற்கும் ஆபத்து வராது" என்று பரிசல் ஓட்டியிடம் ஆலோசனை சொன்னார்கள்.

அப்போது பரிசல் ஓட்டி "அய்யோ! இவன் மிக மோசமானவன். கை, கால்களை கட்டிப் போட்டாலும் அவனால் கெட்டது செய்யாமல் இருக்க முடியாது" என்று முடிந்தவரை மறுத்தான்.

ஆனால், ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் ஒருவனை மட்டும் விட்டுவிட்டுப் போவதில் நியாயமில்லை என்று பரிசல்காரனை ஒருவழியாக சமாதானம் செய்துவிட்டு அந்த நபருடைய கைகளையும், கால்களையும் கட்டி அவனைத் தூக்கி உள்ளே போட்டுவிட்டு பரிசலை நகர்த்தச் சொன்னார்கள். பரிசல்காரன் அரைகுறை மனதோடு பரிசலை ஓட்டத் தொடங்கினான். ஏறத்தாழ இரண்டு மைல் அளவுக்கு பரிசல் கடந்து நடு ஆற்றைத் தொட்டது.

இன்னும் பாதி அளவு பயணத்தை கடக்க வேண்டும். மேகம் திரண்டு கொண்டு வந்தது. காற்றும், மழையும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இந்தத் தருணத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அந்தத் தீயசக்தி. விளக்குமாறு கற்றைகளை பக்கத்தில் வைத்த வண்ணம் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்ணிடமிருந்து ஒரு விளக்குமாறு குச்சியை தனது வாயாலே கடித்து உருவினான். வாயில் வைத்திருந்த குச்சியை வைத்து குரங்காட்டியின் மடியில் உட்கார்ந்திருந்த குரங்கின் கண்ணிலே கொண்டு போய் குத்தினான். குரங்கு மிரண்டு பாம்பாட்டி அடுக்கி வைத்திருந்த பாம்புக் கூடையின் மீது விழுந்தது. உடனே பாம்புக் கூடை சரிந்து உள்ளிருந்த பாம்புகள் அனைத்தும் பரிசலுக்குள்ளே விழுந்து ஓட, பரிசலில் பயணம் செய்த அனைவரும் அய்யோ!, அம்மா! என்று அலறி ஒரு புறமாய் ஒதுங்க பரிசல் கவிழ்ந்தது.
தீயசக்திக்கு பரிதாபம் காட்டியவர்கள் நீரினுள் மூழ்கிப் போனார்கள்.

பரிசலில் புகுந்த அந்த தீயசக்தி போல அமைதியான தமிழ்நாட்டு அரசியலில் புகுந்தவர் தான் திருக்குவளை தீயசக்தி என்னும் கருணாநிதி. பரிசல் ஓட்டி எப்படி அந்தத் தீய சக்தியை பரிசலில் ஏற வேண்டாம் என்று தடுத்தானோ; அது போலவே கருணாநிதியின் தீய குணங்களை அறிந்த காரணத்தால் தான் பேரறிஞர் அண்ணா கூட "தம்பி வா, தலைமையேற்க வா" என்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் பார்த்துத் தான் அழைத்தாரே தவிர கருணாநிதியை அப்படி அழைக்கவில்லை.

"நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று அண்ணா அவர்கள் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை ஜாடையாக அடையாளம் காட்டினாரே தவிர கருணாநிதியை அப்படி அடையாளம் காட்டவில்லை. ஆனால், தமிழக மக்களின் பொல்லாத காலம் தமிழக அரசியலின் போதாத நேரம் கருணாநிதி என்னும் தீயசக்தியின் தந்திரங்கள் வென்றன. அதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

http://kingsolomonraja.blogspot.com/2010/10/blog-post.html
-------------

No comments:

Post a Comment