Friday, January 14, 2011

ரேஷன் அரிசி கடத்தல் - தி மு க வினரின் முழு / பகுதி நேர தொழில்

“ரேஷன் அரிசியில் நவீன மோசடி! திகைக்க வைக்கும் மதுரை

கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், போட்ட முதல் கையெழுத்து ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதற்கான கோப்பில்தான். ஏழை எளிய மக்களுக்காகக் கொண்டுவரப்பட்டத் திட்டம் அது. எந்த நோக்கத்திற்காக அத்திட்டம் அமல்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், அத்திட்டத்திற்கான அரிசியை மூட்டை மூட்டையாய் கேரளா, கர்நாடகம் என கடத்துவது அரிசி ஆலை முதலாளிகளுக்கும், ரேஷன்கடை ஊழியர்களுக்கும் கை வந்த கலை.

முன்பெல்லாம் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாய் வெளிமாநிலங்களுக்குக் கடத்தியவர்கள், இப்போது எந்த மாநிலத்துக்கும் கடத்துவது இல்லை. அதற்குப் பதிலாகப் புதிய டெக்னிக் ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறது ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 150 அரிசி ஆலைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 26 தனியார் அரிசி அரவை ஆலைகளை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த அரிசி ஆலைகளில் இருந்துதான் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

‘போன மச்சான் திரும்பி வந்தாண்டி’ என்ற கதையாக ரேஷன் கடைகளுக்குப் போன அரிசி திரும்பவும் அரிசி அரவை ஆலைக்கே வருவது தான் கடத்தல் கும்பலின் ஹைடெக் டெக்னிக் ஃபார்முலா.

ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக, மதுரையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலுடன் நம்மைத் தொடர்பு கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன். அவரே இதுபற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.

“விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து அவித்து, அரைத்து ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்றடையும் வரை அரவைக் கூலி, லாரி வாடகை உள்பட ஒரு கிலோ அரிசி பதினேழு ரூபாய் முதல் பதினெட்டு ரூபாய் வரை ஆகிறது.

நெல்லை அவித்து அரைத்து அரிசியாக மாற்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான அரிசி ஆலைகளைத் தவிர, மேலும் தனியார் ஆலைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் உரிமம் கொடுக்கிறது நுகர்பொருள் வாணிபக் கழகம். அரைப்பதற்காக அரசு அனுப்பும் நெல்லை, தனியார் ஆலை நிறுவனத்தினர் வெளிமார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள். அதற்கு பதிலாக, கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசியைக் கடத்தி தங்களது ஆலைகளுக்கே கொண்டு வந்து வேறு சாக்குகளில் மாற்றி மீண்டும் அரசின் உணவு கிட்டங்கிற்கே அனுப்பி வைக்கின்றனர். அதாவது நெல்லை அரைத்து அனுப்புவதுபோல கணக்குக் காட்டிவிடுகின்றனர். இது ஒரு சுழற்சி முறை.

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் சுமார் 17 லட்சம் டன் நெல்லிற்கு, அந்தந்த மாவட்ட முகவர்கள் மூலமாகச் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் வரை 170 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்படுவதாக அந்தத் துறையின் அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு இத்தனை கோடி என்றால், வருடத்துக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது.

தனியார் அரிசி ஆலைகள், அரசாங்க நெல்லை அரைத்து தரமான அரிசியை உணவு கிட்டங்கியில் செலுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், முதுநிலை மண்டல மேலாளர், முதன்மை தரக்கட்டுப்பாடு அதிகாரி, சூப்பர்வைசர்கள், பறக்கும் படை தாசில்தார், உணவு கடத்தல் போலீஸார் உட்பட அனைவருக்கும் ‘கட்டிங்’ சென்றுவிடுகிறது.

மதுரை மாவட்டத்தில் 26 தனியார் அரிசி ஆலைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், முகவர்களாக இருக்கிறார்கள். இந்த நவீன அரிசி ஆலைகள் அனைத்தும் முழுத் திறனோடு அரைத்தால் மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 டன் நெல்லை மட்டுமே அரைத்துக் கொடுக்க முடியும். ஆனால், அனைத்து அதிகாரிகளின் துணையோடு மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் டன் நெல் அரைத்ததாகக் கணக்கு மட்டும் காண்பிக்கின்றனர். மீதமுள்ள நெல்லை வெளிமார்க்கெட்டில் விற்று விடுகிறார்கள்.

நெல் அரைப்பதற்காக மின்சாரத்தைக் குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள அரவைக்கு ஜெனரேட்டர் பயன்படுத்தியதாக டீசல் பில் கொடுத்து, அதற்காக பில் க்ளைம் பண்றாங்க” என்று பல உண்மைகளை வெட்ட வெளிச்சப்படுத்தினார் சோலைக்கண்ணன்.

அக்கட்சியின் மதுரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் தென்றல் ரவி கூறுகையில், “முதல்வர் கலைஞர் ஏழை மக்களுக்காகக் கொண்டு வந்துள்ள மானிய விலை அரிசி திட்டத்தை கோழித் தீவனம் மற்றும் மாட்டுத் தீவனத்திற்குக் கருப்பு அரிசியுடன் கலந்து அரைப்பதற்காக நாமக்கல், சேலம் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதும் வேதனை அளிக்கிறது” என்கிறார்.

இது பற்றி உணவுத் துறை அமைச்சரான வேலுவிடம் பேசியபோது, “அரசு உரிமம் பெற்ற அரிசி ஆலைகளிலிருந்து வரும் ரேஷன் அரிசி திரும்பவும், அதே ஆலைகளுக்குப் போவதாக எனக்கு புகார்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து விஜிலென்ஸை முடுக்கிவிட்டிருக்கிறேன். மதுரையில் இப்புகார் குறித்த புலனாய்வு தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இரண்டுநாள் முன்பு கூட சென்னையில், ஃபுட் செல் டீம் 400 அரிசி மூட்டைகளை கைப்பற்றியிருக்கிறது. மதுரையில் இருப்பவர்கள் எனக்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் எனக்கு மாமன் மச்சானும் கிடையாது. யார் தவறு செய்தாலும், என் கட்சிக்காரனே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார் உறுதியாக.

http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34846042&page=11&sort=newestFirst

No comments:

Post a Comment