Friday, January 14, 2011

லஞ்சம் விளையாடும் சமத்துவபுரங்கள்

காசு கொடுத்தால்தான் வீடு!
லஞ்சம் விளையாடும் சமத்துவபுரங்கள்

House.jpg

‘‘விவேகம் என்னும் வெள்ளி முளைத்து ஜாதி எனும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்ற ஞாயிறு பிறக்கும்’’ என்று கலைஞரின் தத்துவமாக, ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பல இடங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரம் ஜாதியை ஒழித்ததோ இல்லையோ, லஞ்சத்தை பாலூற்றி வளர்த்து வருகிறது.

ஜாதிப் பாகுபாடுகள் நீங்கி, சமத்துவமாக மக்கள் வாழ வழிவகுக்கும் என்ற நினைப்பில், கலைஞரின் மனதில் உருவானதுதான் சமத்துவபுரம் என்ற திட்டம். நூறு வீடுகளைக் கொண்ட இந்த சமத்துவ புரத்தில், ஐம்பது வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும் மீதமுள்ள ஐம்பது வீடுகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

இலவசமாக, வழங்கப்படவேண்டிய இந்த வீடுகளை அதிகாரிகளில் சிலர், வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை கிளப்புகின்றனர் ராதாபுரம் மக்கள்.

நெல்லை மாவட்டம் ராதா-புரத்தில் கடந்த அக்டோபர் 13ம் தேதி அன்று சமத்துவபுரத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு சமத்துவபுரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தகுதியுள்ள பலர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் மனு கொடுத்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

House%202.jpgஅவர்களைச் சந்தித்து என்ன நடந்தது? என்று கேட்டோம்.

கீதா என்பவர் தைரியமாகப் பேச முன் வந்தார்.

“நாங்க நாலு தலைமுறையா இதே ஊரில்தான் இருக்கிறோம். எனக்கு மூன்று பிள்ளைகள். பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறோம். வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். சமத்துவபுரத்தில் வீடு வேண்டும் என்று மனு கொடுத்திருந்தோம். இது வரையிலும் வீடு தரவில்லை. பல இடங்களிலும் மனு கொடுத்து வருகிறோம். வீடு தருவாங்களான்னு தெரியலை” என்றார் பரிதாபமாக.

அடுத்து கலங்கிய கண்களுடன் வந்தார் ராஜம்மாள். “எனது மகனும் மருமகளும் இறந்து விட்டனர். பேரன், பேத்திகளை நான்தான் வளர்த்து வருகிறேன். கூலி வேலைக்குப் போய், அவங்களுக்கு கஞ்சி ஊத்தறேன். ரேஷன் கார்டுகூட இருக்கு. எங்களை விட நல்லபடியா இருக்குற பல பேருக்கு, சமத்துவபுரத்தில் வீடு கெடச்சிருக்கு. எங்களப் போல ஏழை பாழைகளுக்குக் கொடுக்கலாமே இந்த அதிகாரிங்க’’என்று கண்ணீர் மல்கக் கூறினார். சுடலையாண்டி என்பவர், சமத்துவபுர அதிகாரிகளை நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.

“என்னுடைய மகள் ஊனமுற்றவர். அவருக்குத் தான் வீடு கேட்டு விண்ணப்-பித்திருந்தோம். ஆள் பிடிக்கிற-வங்களுக்குத்தான் வீடு என்ற நிலைமை தான் உள்ளது. வசதியானவங்க, அதிகாரிகளை கவனிச்சவங்களா பார்த்து வீடு கொடுத்துட்டாங்க. அரசாங்கம் தரும் வீட்டுக்குக்கூட, லஞ்சம் தரணும்னு சொன்னா நாங்க என்ன செய்ய முடியும்?’’ என்றார் வேதனையுடன்.

கண்ணன் என்பவர், “நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன். தினக்கூலி வேலைக்குத் தான் போறேன். நிரந்தரமா தங்க ஒரு வீடு இல்லைன்னுதான் மனு கொடுத்தேன். இப்ப இருக்கிற குடிசையும் மழை பெய்தால் ஒழுகும். மழை பெய்தால் லைப்ரரி பில்டிங்கில்தான் ஒதுங்குவோம். எங்ககிட்ட யாரும் பணம் கேட்கலை. கேட்டாலும் கொடுக்கக் கூடிய நிலைமையில நாங்க இல்லை” என்றார்.

நம்மிடம் புகைப்படம், பெயர் தவிர்த்துப் பேசிய பலர், பஞ்சாயத்து யூனியன் அலுவலகப் பணியாளர் ஒருவரையும், தலையாரி ஒருவரையும் குறிப்பிட்டு, இவர்கள்தான் பணம் பெற்றுக்கொண்டு, நிரந்தர வீடு உள்ளவர்கள், இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் என்று பலருக்கும் வீடுகளை வழங்கக் காரணமாக இருந்தார்கள், என்று சொன்னார்கள்.

இரு மனைவிகளையுடைய ஒருவர், தனது செல்வாக்கால் இரண்டு மனைவிகளுக்குமே வீடு ஒதுக்கிக்கொண்டார். விஷயம் தெரிந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியதும், ஒரு வீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர், ‘‘இப்போது வீடு வாங்கி-யுள்ளவர்களுக்கு நிரந்தர வீடுகள் வேறு எங்கேனும் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை கலெக்டர் வலியுறுத்திச் சொன்னால்-போதும், சமத்துவ-புரத்தில் வீடு வாங்கியுள்ளோர் பலர் ஓடிவிடுவார்கள்’’ என்று சொன்னார்கள்.

ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர வடிவேலுவிடம் இதுபற்றிப் பேசினோம்.

House%203.jpg“சேரன் மகாதேவி சப்-கலெக்டர் உள்ளிட்ட பல அதிகாரிகள், பரிசீலனை செய்த பிறகுதான் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றை பரிசீலனை பண்ணி நூறு பயனாளிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

வீடு கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இதுபோன்ற புகார்களை கூறுகின்றனர். அவர்களில் சிலருக்கு, உண்மையிலேயே அனைத்து தகுதிகளும் இருந்தும் கிடைக்காமல் இருந்திருந்திருக்கலாம். இருப்பது நூறு வீடுகள்தான். அதற்குள்தான் கொடுக்க முடியும். தவறான முறையில் யாருக்கும் வீடுகள் கொடுக்கப்படவில்லை” என்றார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமனிடம் பேசினோம்.

“சமத்துவபுரத்தில் வீடு கிடைக்காதவர்களில் சிலர் நீதிமன்றங்களை அணுகியிருந்தனர். தகுதி இருந்தால் பரிசீலனை செய்யவும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டன நீதிமன்றங்கள். என்னிடத்திலும் புகார்கள் கொடுத்துள்ளனர். தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை உறுதி” என்றார்.

சமத்துவபுரத்தில் வீடுகள் பெறுவதற்கு நிலம் உடையவர்கள்தான் தகுதியுள்ளவர்களாம். ஆனால் அந்த நிலத்தில் நிரந்தர வீடு இல்லாதவர்களுக்குத் (குடிசைகளில் குடியிருப்பவர்கள்)தான் வீடு என்கின்றனர் அதிகாரிகள். நிலம் இல்லாதவர்களுக்கு வீடுகள் கிடையாதாம். என்ன கொள்கையோ? அரசு அதிகாரிகளுக்கே வெளிச்சம்!

சமத்துவபுரத்தின் மூலம் சமத்துவம் உருவாகிறதோ இல்லையோ, அரசு ஊழியர்கள், அதிகாரிகளில் சிலர் வளமாகிறார்கள் என்பதுதான் உண்மை!

http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34846042&page=11&sort=newestFirst

No comments:

Post a Comment