Friday, January 14, 2011

கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு':

கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை, அனைத்து பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே போவது, ஏழை, நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவதோடு, சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், விலைவாசி உயர்வும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டில், கட்டுமான பொருட்கள் முதல், காய்கறி வரை, அனைத்து பொருட்களின் விலையும் வரையறையின்றி அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு மூட்டை சிமென்ட் 270 ரூபாய், கம்பி ஒரு டன் 39 ஆயிரம் ரூபாய், மணல், ஜல்லி தலா ஒரு யூனிட் 2,500 ரூபாய், ஒரு செங்கல் ஏழு ரூபாய் என, விலை அதிகரித்துள்ளது. கட்டுமான பொருட்களின் இந்த விலை உயர்வால், வங்கி கடன், சேமிப்பு ஆகியவற்றை கொண்டு, சொந்த வீடு கட்ட நினைக்கும் ஏழை, நடுத்தர மக்கள் கூட, அந்த எண்ணத்தை கைவிட்டு தவிக்கின்றனர்.


சொந்த வீடு கனவு நிராசையாகியுள்ள நிலையில், வீட்டு வாடகையும், "கிடுகிடு'வென உயர்வதால், வேலை விஷயமாக வெளியூரில் வசிக்கும் ஏழை குடும்பத்தினர், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை வாடகைக்கே கொடுத்து, குடும்பம் நடத்த திணறுகின்றனர். இந்நிலையில், காய்கறிகளின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தினர் திருமணத்துக்கு வாங்கும் தங்க நகையும், ஒரு சவரன் 15 ஆயிரத்து 700 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மத்திய அரசு பெட்ரோல் விலையையும், மூன்று ரூபாய் உயர்த்தியதால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 61 ரூபாயாக உள்ளது.


அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், வெளியூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தை ஊரிலேயே விட்டு, விட்டு தாங்கள் மட்டும் தனியாக தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வேலை செய்கின்றனர். இந்நிலையில், ஓட்டல்களிலும் காபி விலை 14 ரூபாய், இரண்டு இட்லி 17 ரூபாய், டீ 9 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது மசாலா பொருட்கள், காய்கறி, கட்டுமான பொருள் என, அன்றாட பயன்பாட்டிற்கான அனைத்து பொருட்கள் விலையும், "கிடுகிடு'வென உயர்ந்து வரும் நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காஸ் விலையையும் மத்திய அரசு 50 ரூபாய் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஏழை, நடுத்தர குடும்பத்தினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: www.dinamalar.com

No comments:

Post a Comment