கலைஞர் வீட்டுக்குப் போன சிறுவன், காப்பகத்தில்!
மீட்டுக் கொடுத்த ஜெயலலிதா
தமிழக முதல்வர் கலைஞரின் வீட்டுக் கதவைத் தட்டி உதவி கேட்கப் போன பர்கூர் சிறுவன், சென்னையில் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டான். அவனை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா!
நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும், அதுதான் நிஜம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, அ.தி.மு.க.வின் பாசத் தொகுதியான (பின்னே ஒரு காலத்தில் அம்மா ஜெயிச்ச தொகுதியாச்சே!) பர்கூரைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக். அப்பாவும், அம்மாவும் இறந்துவிட, தன் தந்தை வழி பாட்டனாருடன் பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் தற்போது வசித்துவருகிறான். அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுவன்தான், முதல்வர் கலைஞரிடம் உதவி கேட்க சென்னைக்குப் புறப்பட்டவன்.
பர்கூர் வீட்டில் அவனை சந்திக்கச் சென்றபோது, வணக்கம் தெரிவித்து நம்மிடம் கைகுலுக்கினான்.
அவனது தாத்தா கிருஷ்ணன் நம்மிடம், “இவன் என் பையனுக்கு இரண்டாம் தாரத்தோட புள்ளைங்க. இவனுக்குத் தங்கச்சி ஒண்ணு இருக்கு. என் பையன் மாமியார் வீட்டுல (காவேரிப்பட்டணம்) போயி செட்டிலாயிட்டான். பத்து வருசத்துக்கு முன்னாடி வரக்கூடாத நோய் வந்து செத்துப் போயிட்டான். அவங்க அம்மாவும் ஆறு மாசத்துக்கு முன்னாடி இவங்களை தவிக்கவிட்டுட்டு, செத்துப் போயிட்டா. புள்ளைங்க இரண்டையும் நாங்கதான் கூட்டிக்கிட்டு வந்து வளர்க்குறோம்.
சின்ன வயசில இருந்து இருதயத்துல இவனுக்குக் கொஞ்சம் பிரச்னை இருக்கு. அதுக்கும் இப்ப மாத்திரை சாப்பிட்டுட்டு வர்றான். அதனால இவன மிரட்டாம வச்சிருந்தோம். அடிக்கடி வீட்டுல யாருகிட்டயும் சொல்லாம கிருஷ்ணகிரி, ஓசூர்ன்னு போயிடுவான். நாங்களும் தவிச்சிப் போய், இவனைத் தேடி புடிச்சி வீட்டுக்குக் கொண்டு வருவோம். போன வாரம்(செப்டம்பர் 12-ம் தேதி) மத்தியானத்துக்கு மேல இவன காணலை. வீட்டுல இருந்த 500 ரூபாயையும் காணலை. ஓசூர்ல எங்க மகள் வீடு இருக்கு. அங்க போயிட்டு வந்துடுவான்னு நாங்களும் தேடாம விட்டுட்டோம். நாலு நாள் கழிச்சி அ.தி.மு.க. கட்சியில இருக்கிற ஒருத்தர் வந்து சொல்லித்தான் இவன் மெட்ராஸ்ல இருக்குற விஷயம் எங்களுக்குத் தெரியும்.
தகவல் சொன்ன அ.தி.மு.க. கட்சிக்காரரே, எங்களை சென்னைக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அ.தி.மு.க. கட்சி ஆபீஸ்ல விட்டாரு. அங்க இருக்கிறவங்கதான் புள்ளைய மீட்டுக் கொடுத்து துணி, நோட்டு வாங்கிக் கொடுக்கச் சொல்லி பணமும் கொடுத்தாங்க. நானும் என் பொஞ்சாதியும் கூலி வேலைக்குப் போனாத்தான் வீட்டுல சாப்பாடே. இதுல இவன் கவலை வேற...” என்று சோகமாய் சொல்லி முடித்தார்.
கார்த்திக்கை அழைத்து அவனிடம், ‘ஏன் கலைஞர் வீட்டுக்குச் சென்றாய்?’ என்று கேட்டோம். “அப்பா, அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்க. பாட்டியும், தாத்தாவுந்தான் வேலைக்குப் போயி சாப்பாடு போடறாங்க. பாட்டி உடம்பு சரியில்லாம இருமிக்கிட்டு வயசான காலத்துல களைவெட்டப் போறாங்க. எங்களுக்காகத்தானே அவங்க வேலைக்குப் போயி கஷ்டப்படறாங்க. பள்ளிக்கூடம் போனாலும் எல்லாரும் அம்மாவோட வர்றது, போறதைப் பார்த்து எனக்கு அழுவாச்சி வந்துடும். வீட்டுல சில நாள் சாப்பாடு இருக்காது.
எனக்குத் திடீர்னு நெஞ்சு வலிக்கும். இதை எல்லாம் பார்த்துட்டுதான் கலைஞர் அய்யாக்கிட்ட உதவி கேட்கப் போனேன். அவர்கிட்ட என் நிலைமையைச் சொன்னா நல்லது செய்வாருன்னுதான் போனேன். போன சனிக்கிழமை(செப்டம்பர் 12-ம் தேதி) ராத்திரி 9 மணிக்கு கலைஞர் வீட்டுக்குப் போனேன். அங்க போலீஸ்காரங்க ரொம்பப் பேர் இருந்தாங்க. அங்க போய் ‘கலைஞரை பார்க்கணு’முன்னு கேட்டேன்.
‘இங்க எல்லாம் பார்க்க முடியாது. ஊருக்குப் போயி லெட்டர் போடு’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நான் மறுபடியும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்து தூங்கிப் போயிட்டேன். அங்க வந்த போலீஸ்கார அக்காதான் என்னை ஒரு இடத்துல கொண்டு போய்விட்டாங்க. எங்க தாத்தா, பாட்டி வந்தவுடனே விட்டுட்டாங்க” என்றான்.
பர்கூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் ஜெயராமிடம் பேசினோம். “கட்சித் தலைமையிலிருந்து என்னை கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாங்க. நானும் அவங்க பாட்டியைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி தலைமைக் கழகத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன். ‘பையனை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு, அவனுக்கு உதவிகள் தேவைன்னா தகவல் சொல்லுங்க’ன்னு சொல்லியிருக்காங்க” என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது பற்றிப் பேசினோம். “ஏதோ சிறுவன் உதவி கேட்டு முதல்வர் வீட்டுக்கு வந்துட்டான். அங்கிருக்கும் காவலர்கள் அவனிடம் விசாரித்து ஊருக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு அவனை விரட்டி அடிப்பது எந்த விதத்தில் சரி? கோயம்பேடு பஸ் நிலையத்தில் படுத்திருக்கும்போது, அங்கு இருந்த போலீஸார் அவனை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். இச்செய்தியை கொடநாட்டிலிருக்கும் அம்மாதான் படித்துவிட்டு, என்னிடம் தகவல் சொன்னார்.
அவனை அழைத்து வந்து தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்-திருக்கிறோம். கார்த்திக் இப்போது எட்டாவது படிக்கிறான். அவனை நன்றாகப் படிக்கச் சொல்லி, மேற்படிப்புக்கு அவனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய அம்மா உத்தரவிட்டுள்ளார். அவனது உடல்நிலை பற்றி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர்களுக்கு அப்படி ஏதாவது உதவி தேவைப்பட்டால், அம்மாவின் கவனத்துக்கு உடனே கொண்டு சென்று சிகிச்சைக்கான ஏற்பாட்டை கண்டிப்பாகச் செய்கிறேன்” என்றார்.
கலைஞரிடம் உதவி கேட்கப்போய் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்ட பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சேரும். கொடநாட்டில் இருந்தாலும் சென்னை பதிப்பில் வெளியாகும் பத்திரிகைகளை அன்றாடம் ஜெயலலிதா படித்து வருவதால்தான் இச்சிறுவன் மீட்கப்பட்டிருக்கிறான். சமீபத்திய இடைத்தேர்தலில் பர்கூர் தொகுதியை தி.மு.க.விடம் இழந்தபோதும், பர்கூரின் மேல் கவனம் செலுத்தி இச்சிறுவன் விஷயத்தில் உரிய நேரத்தில் உதவி செய்த ஜெயலலிதாவை பாராட்டவே செய்கிறார்கள், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பர்கூர் வாசிகள்!
http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34846042&page=11&sort=newestFirst
No comments:
Post a Comment