Saturday, January 15, 2011

ஜூனியர் விகடனை மிரட்டிய அழகிரி

ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.

இதையடுத்து, சென்னைப் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில், பல்வேறு பத்திரிகைகளையும், செய்தித் தொலைக்காட்சி சேனல்களையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் செய்தி ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்தும், ஜூனியர் விகடன் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜூனியர் விகடன் ஆசிரியர் வாசித்த கடிதத்தின் விவரம் வருமாறு:

மதிப்புக்குரிய ஊடக நண்பர்களுக்கு,
வணக்கம்...

ஜூனியர் விகடன் 8.8.2010 தேதியிட்ட இதழில் 'மிஸ்டர் கழுகு' பகுதியில் 'மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்ற செய்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 10.8.2010 அன்று காலை நாளிதழ் ஒன்றில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கை அலுவலகம் முன்பு நடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கிற்கு இத்தகைய சவாலை ஏற்படுத்தப்போவதாக இவர்கள் கூறியிருப்பது, இந்திய தேசத்தின் அரசமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல - பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள்ளது.

இதற்கிடையே செய்தியை எழுதியவர்கள் இன்னார்தான் என்று தாங்களாகவே முடிவு செய்த சிலர் பத்துக்கும் மேற்பட்ட வகையில் மிரட்டல் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரமெங்கும் ஒட்டியுள்ளனர். அதில் நிருபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர்.

தொலைபேசி வாயிலாக முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும், வழியேற்படுத்த வேண்டி தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம்.

தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை தனிப்பட்ட ஒரு பத்திரிகைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எண்ணிவிடாமல் ஒட்டு மொத்த ஊடக சுகந்திரத்துக்குமான மிரட்டலாக கருதி ஊடக நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கண்டனக்குரல் எழுப்பியிருப்பதை நன்றியோடு வரவேற்கிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் முறைப்படி இறங்கியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடக சுகந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குரல் கொடுத்து திரண்ட அத்தனை நண்பர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பத்திரிகையாளர்கள் அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்பத்திரிகையில் பணியாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள். இந்த ஜனநாயக விரோதச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

2. ஜூனியர் விகடன் சார்பில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுவை - சென்னை பத்திரிகையாளர் மன்றம் டி.ஜி.பி.க்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு வழங்க வேண்டும்.

3. இன்று காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் பத்திரிகை அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

4. தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறுவோம்.

5. பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பகிங்கரமாக அச்சுறுத்தல் விடுத்த நபர்கள், சங்கங்களின் அமைப்புகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைப்போம்.

6. பத்திரிகைகளை விமர்சித்து மிரட்டி வெளியான விளம்பரத்தை சில பத்திரிகைகள் வெளியிட்டது பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான பத்திரிகை உரிமையாளர்களை சந்தித்து நமது வருத்தத்தை பதிவு செய்வோம்.

7. ஜூனியர் விகடன் சம்பவம் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிரான சம்பவங்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளார் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

8. பத்திரிகை உரிமையாளர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல ஒரு குழு அமைக்கப்படும்.

9. பத்திரிகையாளர் மீதான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்துக்கு முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், "பத்திரிகை அலுவகத்துக்கு மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பத்திரிகையாளர்கள் மீதான பொய்ப் புகார்களை திரும்பப் பெற வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டத்திலும் சிறிது நேரம் ஈடுபட்டனர்.

பத்திரிக்கையாளரின் நண்பர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என பத்திரிக்கைத்துறை நண்பர்கள் தங்களூக்குள் அங்கலாய்த்துக்கொள்கின்றன.

http://adrasaka.blogspot.com/2010/08/blog-post_4563.html

No comments:

Post a Comment