திமுகவின் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக என்றதும், ஏதோ மாவட்டச் செயலாளர்கள் யாராவது கலகம் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.
இது மாவட்டச் செயலாளர்கள் யாரும் செய்த கலகம் அல்ல. கழகம் என்றால் குடும்பம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். அந்தக் குடும்பத்தில் தான் இன்று கலகம் நடந்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டின் கடைசி நாளில் தொடங்கிய அந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த மாதம் 31 அன்று தொலைபேசியில் கருணாநிதியை அழைத்த அழகிரி, தனது கோபத்தையெல்லாம் கருணாநிதியிடம் கொட்டி விட்டு, ராசாவை திமுகவை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என்று தெளிவாக தெரிவித்து விட்டார். ஆனால் கருணாநிதி இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
கடந்த பதிவில் எழுதியிருந்தது போல, அழகிரி சென்னைக்கு வந்து கடந்த 3ம் தேதி, தனது தென் மண்டல செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
அதற்கு முதல் நாள் கடும் குருட்சேத்திரம் நடந்திருக்கிறது சிஐடி காலனியில்.
“நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம், தேர்தல சந்திக்கிறோம். இங்க என்னடான்னா சென்னை சங்கமம்னு கூத்தடிச்சிகிட்டு இருக்காங்க. நம்ப குடும்பத்துக்கு வந்த எல்லா அவமானமும் அந்தக் குடும்பத்தாலதான். என்னை கட்த்ரோட் அரசியல்வாதின்னு ************* பேசறா…. அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்காம கம்முனு இருக்கார். இப்படியே போனா நாளை பின்ன என்னை எவன் மதிப்பான். இவரு என்னடான்னா அந்த வீட்லயே போய் உக்காந்துகிட்டு இருக்காரு… எம்பி பதவிய ராஜினாமா செய்யச் சொல்லுங்க. சங்கமத்த நிறுத்தச் சொல்லுங்க. நானா அந்தக் குடும்பமான்னு முடிவெடுக்கச் சொல்லுங்க…… “ என்று கடும் கோபத்துடன் பேசி விட்டு சென்றிருக்கிறார்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் கருணாநிதியிடம் சொல்லப் பட்டாலும், இறுக்கமாக இருந்த கருணாநிதி ஒன்றும் பதில் பேசவில்லை.
நேற்று கனிமொழி பிறந்தநாளுக்கு சிஐடி காலனி சென்ற கருணாநிதி, கனிமொழியிடம் காலையில் பேசி விட்டு, மீண்டும் இரவு பேசியிருக்கிறார்.
நேற்று தனது அமைச்சரவை சகா ஒருவருடன் நீண்ட நேரம் கருணாநிதி புலம்பியிருக்கிறார்.
“என்னய்யா நெனச்சுகிட்டிருக்கான் அவன்… அவன் இல்லன்னா ஒண்ணுமே பண்ண முடியாதா…. 62லேர்ந்து இந்தக் கட்சிய வளத்தவன்யா நானு…. அவன் இல்லன்னா தேர்தல சந்திக்க முடியாதுன்னு நெனைக்கிறானா அவன்….
அவனுக்கு என்னய்யா பண்ணல… ?
எலெக்ஷன்ல நிக்கனும்னான்…. எம்பி ஆக்கினேன். மந்திரி ஆகனும்னான். மந்திரி பதவி வாங்கிக் கொடுத்தேன்… கட்சிப் பதவி வேணும்னான். தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தேன்…. இப்ப என்னய்யா ஓவரா பேசறான்… இவன் சொல்ற ஆளையெல்லாம் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கட்சியை எப்படி நடத்துறது… ?
என்னமோ ரொம்ப பேசறானே….. இவன் மட்டும்தான் கட்சிய வளத்தானா… ? நான் வளக்கலியா…. நீ வளக்கலியா..? இவந்தான் கட்சி மாதிரி பேசறான்… ? “ என்று புலம்பியிருக்கிறார்.
சென்னை சங்கமம் விழா என்ன ஆனாலும் நடந்தே தீர வேண்டும் என்று உறுதியாக கருணாநிதி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
அடுத்த அதிர்ச்சிகரமான தகவல். கனிமொழிக்காக, அழகிரியை தியாகம் செய்ய கருணாநிதி துணிந்து விட்டார் என்பதுதான். ஆம் தோழர்களே…
முந்தாநாள் பேராசிரியர் அன்பழகனை தொடர்பு கொண்ட கருணாநிதி, அழகிரியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொண்டதாக திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எப்போது கருணாநிதி கேட்டாலும் உடனடியாக கையெழுத்து போட்டுத் தரும் அன்பழகன், முதன் முறையாக “யோசித்துச் செய்யுங்கள்“ என்று கூறியிருக்கிறார். தான் நினைத்ததை நடத்தியே தீரும் பிடிவாத குணம் கொண்டவரான கருணாநிதி, துரைமுருகனை உடனடியாக வரச் சொல்லி, அன்பழகனை சந்தித்து, அழகிரியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் படி அன்பழகனை வற்புறுத்துமாறு கூறியுள்ளார். அதன் படி, அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு அன்பழகனை சந்தித்து விட்டு 11.30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்.
இது இப்படி இருக்க, அஞ்சா நெஞ்சன், தொடை தட்டிக் கொண்டு களமிறங்க தயாராகி வருகிறார். தனது ஆதரவாளர்களோடு தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் அவர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களோடு திமுகவை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதற்காக ஜனவரி 14 பொங்கல் வரை கெடு விதித்திருப்பதாகவும் அழகிரி கூறியிருக்கிறார். கனிமொழி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ராசா கட்சியை விட்டு நீக்கப் பட வேண்டும், சென்னை சங்கமம் ரத்து செய்யப் பட வேண்டும் என்ற தனது கோரிக்கையில் அழகிரி பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிகிறது.
கருணாநிதியும் அழகிரியும் ஆளுக்கு ஒரு பக்கம் தோள் தட்டி வரும் நிலையில், திமுகவில் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில், தான் இரண்டாவதாக திருமணம் செய்த லட்சுமி சிவபார்வதிக்காக, தான் உருவாக்கிய கட்சியான தெலுங்கு தேசம் தன் வாழ் நாளிலேயே இரண்டாக உடைந்ததை பார்த்தவர் என்.டி.ராமாராவ்.
அந்தக் காட்சியை இது நினைவுபடுத்தவில்லை ?
எது எப்படியோ, 2011 ஆண்டு அமர்க்களமாகத்தான் தொடங்கியிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி மரண ஓலமிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்காக போலித்தனமாக ஊளையிட்டுக் கொண்டே, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இந்தக் குடும்பம், இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாவது, சவுக்குக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
No comments:
Post a Comment