Friday, January 14, 2011

தி மு க வின் உட்குடும்ப புகைச்சல்

‘களையெடுப்பு’ பொங்கல்:
கெடு விதித்த அழகிரி... கிடுகிடுத்த கலைஞர்!

‘ஆ,ராசா ராஜினாமா... ரெய்டு... விசாரணை... என்று அடுத்தடுத்து தி.மு.க. மீதான ‘இமேஜ்... டேமேஜ்’களை ஏற்படுத்திவிட்டு, ‘ஸ்பெக்ட்ரம்’ புயல் சற்றே ஓய்ந்திருக்கிறது’ என்று ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், வீச ஆரம்பித்திருக்கிறது ‘அழகிரி புயல்’! இந்தப் புயலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் தொடர்ச்சிகளை மையமாக வைத்துதான் வீசுகிறது என்பதுதான் சுவாரஸ்யம்.

‘பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம்... காங்கிரஸுடனான உறவும் தொடரவே வாய்ப்பு அதிகம். எனவே, வரும் தேர்தலை எளிதில் எதிர்கொள்ளலாம்’ என்று தி.மு.க. முன்னோடிகள் பலரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்ததில் நிலைகுலைந்து போனார்கள் கழக முன்னோடிகள். ‘‘படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்கள் கூட ‘ஏதோ நடந்திருக்கிறது’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே, கட்சியின் இமேஜைக் காப்பாற்ற, ராசா ராஜினாமா செய்ததுடன் நிற்காமல், அவரை கட்சியில் இருந்து நீக்கி வைத்தால் & குறைந்த பட்சம் அவர் வகித்து வரும் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கினால், கொஞ்சம் நிலைமையைச் சமாளிக்கலாம்’’ என்று ஒரு சாரார் சொல்ல... ‘‘அப்படிச் செய்தால் நாமே குற்றத்தை ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். கட்சியின் இமேஜ் மேலும் பாதிக்கவே செய்யும்’’ என்று வாதிட்டனர் இன்னொரு சாரார்.

ராசாவுக்கு ஆதரவாக ‘வழக்கமான’ ஆதரவுகளும் வந்து நெருக்கடி தர... கலைஞர் ராசாவைக் காப்பாற்ற முன்வந்தார். ‘ஸ்பெக்ட்ரம்-நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார். பல இடங்களில் இந்தக் கூட்டங்களும் நடந்து முடிந்துவிட்டது.

இந்த நேரத்தில்தான் தன்னுடைய எதிர்ப்பை வலுவாகக் காண்பிக்க ஆரம்பித்தார் அழகிரி. ‘‘நானும், தம்பியும் உழைத்து கட்சியை வளர்ப்போம்... யார் யாரோ, எதை எதையோ செய்து கட்சிப் பெயரைக் கெடுப்பார்கள்... அவர்களைக் கட்சி காப்பாற்ற வேண்டுமா?’’ என்று கலைஞரிடம் ஆவேசப்பட்டார் அழகிரி. ஆனால், அதன்பிறகும் ராசா ஆதரவுக் கூட்டங்கள் நடந்தன.

இதனால் வெறுப்படைந்த அழகிரி, டிசம்பர் 31 அன்று கலைஞரைத் தொடர்புகொண்டார். ‘‘நாளை புத்தாண்டையொட்டி ஓர் அறிக்கை வெளியிட இருக்கிறேன். பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக அதில் சொல்லப் போகிறேன்’’ என்று அவர் சொல்ல, பிரயத்தனப்பட்டு அழகிரியைச் சமாதானப்படுத்திய கலைஞர், அழகிரியிடமிருந்து அறிக்கை வராமல் பார்த்துக் கொண்டார்.

ஆனாலும், அழகிரியின் ஆவேசம் தணியவில்லை. புத்தாண்டு தினத்தன்று தன்னைச் சந்தித்து வாழ்த்துச் சொன்ன ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பிரமுகர்களிடம், ‘‘இந்தக் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தி.மு.க.வில் இருக்கிறேன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. எனக்கு எதுக்காக வாழ்த்து சொல்றீங்க?’’ என்று விரக்தியும், ஆவேசமுமாகப் பேசியிருக்கிறார்.

அடுத்த நாள் ஜனவரி 2-ம் தேதி காலை நெல்லையில் அமைச்சர் மைதீன்கான் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டார் அழகிரி. அவர் இருக்கும் மனநிலையில், அந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினால், ‘மனதில் உள்ளதைச் சொல்லி விடுவாரோ’ என்று பயந்த அழகிரிக்கு நெருக்கமானவர்கள், எப்படியோ அங்கு அவர் பேசுவதை தவிர்த்துவிட்டனர்.

ஆனாலும் கோபம் தணியாத அழகிரி அன்று மாலையே சென்னை வந்து கலைஞரைச் சந்தித்தார். ‘‘மாற்றுக் கட்சியினர் மட்டுமல்ல... தி.மு.க.வினரே கேலி பேசும் அளவுக்கு தி.மு.க.வில் பல விஷயங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் நான் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் தொடர விரும்பவில்லை. அப்பதவியை ராஜினாமா செய்கிறேன். சில நிபந்தனைகளை உங்கள் முன் வைக்கிறேன். அவற்றை சரி செய்தால் இக்கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இக்கடிதத்தை ஏற்று, பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்து விடுங்கள்--’’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு மேலும் அவர் ஆவேசப்பட்டுச் சொன்ன விஷயங்களுக்குள் போகும் முன் அந்த நிபந்தனைகள் என்ன என்பது பற்றி கோபாலபுரம் மற்றும் அறிவாலய வட்டாரத்தில் இருந்து கிடைத்த விவரத்தைப் பார்த்துவிடுவோம்.

1. தவறு செய்யாதவர்கள் யாருமில்லை. ஆனால், இவ்வளவு அப்பட்டமாக, வெளிப்படையாக விதிகளை மீறி நடந்து, இன்று ஒட்டுமொத்த கட்சியையும் தலைகுனிய வைத்துள்ள ஆ.ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

2. ராசாவுடன் சேர்ந்து தவறுகளுக்கு துணை போன கனிமொழியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி, கட்சிப் பணிகளில் இருந்து அவரை சற்றே ஒதுங்கியிருக்கச் சொல்ல வேண்டும். 3. என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில், தரம் தாழ்ந்து விமர்சித்த அமைச்சர் பூங்கோதையை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

4. இத்தனை நடந்தும்... ஜெகத் கஸ்பருடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சியை நடத்தப் போவதாக கனிமொழி அறிவித்துள்ளார். அது நடக்கக்கூடாது. அப்படி நடந்தாலும் நீங்கள் (கலைஞர்) அதில் கலந்து கொள்ளக்கூடாது.

5. உங்களை(கலைஞரை)ச் சார்ந்து இருப்பவர்கள் எல்லோரும் சி.ஐ.டி. காலனிக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அவர்கள் செய்யும் சில தகவல் பரிமாற்றங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக சண்முகநாதனின் செயல்பாடுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. அவர்களைக் கட்டுப்படுத்தி வையுங்கள்.

இவைதான் அந்த நிபந்தனைகள்.

தயாளு அம்மாள் சகிதம் கலைஞருடன் இந்த நிபந்தனைகள் பற்றி கொஞ்சம் சூடாகவே விவாதித்திருக்கிறார் அழகிரி. ராசா மீது நடவடிக்கை எடுத்தால், தலித்துகள் கோபப்படுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவர் ஒருவர் மட்டுமே தலித்துகளின் முகம் அல்ல... பூங்கோதையை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் நாடார்கள் கொந்தளிப்பார்கள் என்று பயமுறுத்துவார்கள். அது உண்மையல்ல... கீதா ஜீவனை அமைச்சராக வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்த கழகமும் களமிறங்கி அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூரில் ஜெயிக்க வைத்தோம். தேவையானால், இவர்களெல்லாம்கூட நாடார்கள் என்று பதில் சொல்லுங்கள்.

சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஒருவர் முன்னின்று நடத்தும் சங்கமம¢ விழா நடப்பதும், அதில் நீங்கள் கலந்து கொள்வதும் எந்தளவுக்கு சரியென்று நீங்களே யோசியுங்கள்... எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்காரங்க (சி.ஐ.டி. காலனி) சொன்னதைக் கேட்டு, இதே நிலை தொடர்ந்தால், என் முடிவில் மாற்றமில்லை...’’ என்று சொன்னாராம் அழகிரி.

தன்னுடைய சமாதான வார்த்தைகளை அழகிரி ஏற்காத நிலையில், ‘இந்தா உன் மகன் கொடுத்த கடிதம்’ என்று அழகிரியின் ராஜினாமா கடிதத்தை தயாளுவிடம் கொடுத்துவிட்டாராம் கலைஞர். அன்று இரவுதான் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்தார் பிரதமர் மன்மோகன் சிங். அவரை விமான நிலையத்தில் வரவேற்கப் போவதாகவும், அன்று இரவு அரைமணி நேரம் அவரைச் சந்தித்துப் பேசப்போவதாகவும் கலைஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்கு கிளம்ப வேண்டிய நேரத்தில் அந்த முடிவை மாற்றிக் கொண்ட கலைஞர், ‘அடையாறு பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்வதை கடைசி நேரத்தில¢ ரத்து செய்துவிட்டார் பிரதமர். எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. பிரதமரை வரவேற்க நான் போகமாட்டேன்’ என்று சொல்லி, விமான நிலையத்திற்கும் போகவில்லை. இரவு பிரதமருடனான சந்திப்பையும் ரத்து செய்தார்.

எதையுமே அமைதியாகக் கையாளும் ஸ்டாலினே ஆவேசப்பட்டது இந்த நேரத்தில்தான். அன்று இரவு பிரதமரை வரவேற்ற ஸ்டாலின், பின்பு கலைஞரைச் சந்தித்து, ‘‘எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான். ராசாவுக்காக நீங்கள் இத்தனை பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நமக்கு நல்லதல்ல. நாளை பிரதமரைச் சந்தியுங்கள்’’ என்று சொல்லி கலைஞரைச் சமாதானப்படுத்தியதுடன், ராசா மீதான நடவடிக்கையை விரைந்து எடுக்கச் சொல்லி, அழகிரியின் குரலுக்கு வலு சேர்த்தார்.

கடைசியில் சமாதானமாகி, மூன்றாம் தேதி காலை பிரதமரைச் சந்தித்தார் கலைஞர். அடையாறு பூங்கா திறக்கப்படவிருந்ததற்கான பின்னணி... வெள்ள நிவாரண உதவி... கூட்டணியின் தற்போதைய நிலை... என சம்பிரதாயமாக நடந்த இந்த இருபது நிமிட சந்திப்பு, கலைஞருக்கும் சற்று நிம்மதி தந்தது.

ஆனால், அழகிரியைச் சமாதானப்-படுத்தும் வேலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கும் எந்தப் பலனையும் தரவில்லை. இந்த நேரத்தில் ஐந்தாம் தேதி காலை டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும் திடீரென்று டெல்லி கிளம்பிப்போய் சோனியாவை சந்தித்தார்கள். உடனே, ‘கட்சிப் பதவியை மட்டுமல்ல... மத்திய அமைச்சர் பதவியையும் அழகிரி ராஜினாமா செய்துவிட்டார்’ என்று தகவல் பரவி, டெல்லி முதல் மதுரை வரை பரபரப்பு அலையடித்தது.

அந்த நேரத்தில் மதுரையில் இருந்த அழகிரியைத் தொடர்பு கொண்டார் அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர். ‘‘கட்சிபதவியை நான் ராஜினாமா செய்தது நிஜம்தான். ஆனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகச் சொல்வது தவறு. அப்படிச் செய்வதாக இருந்தால் நானே பிரதமரைச் சந்தித்து கடிதம் கொடுப்பேனே தவிர, இன்னொருவர் மூலமாக அனுப்பமாட்டேன். இன்று தலைவருக்கு இன்னொரு கடிதம் அனுப்புகிறேன். என்னுடைய உணர்வுகளை அதில் சொல்ல இருக்கிறேன். அதற்கு என்ன பதில் வருகிறது என்று பொங்கல் வரை காத்திருப்பேன். அதன் பிறகு என்னுடைய நிலையை பகிரங்கமாக வெளிப்படுத்துவேன். அப்போது புரியும் இந்த அழகிரி யாரென்று...’’ என்று ஆவேசம் குறையாமல் சொல்லியிருக்கிறார் அழகிரி.

இவருடைய இந்த எண்ண ஓட்டம் சுடச்சுட கலைஞரின் காதுகளுக்கும் வந்து சேர்ந்தது. ‘‘முதல் சமாதான முயற்சியாக பூங்கோதையை ராஜினாமா செய்ய வைக்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் தலைவர். அடுத்ததாக ராசாவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை பறிக்கலாம் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது’’ என்கிறது அறிவாலய வட்டாரத்தில் இருந்து வரும் லேட்டஸ்ட் தகவல்கள்.

இன்னும் சில நாட்களில், நீக்கம்... ராஜினாமா... குமுறல்... என்ற தலைப்புகளோடு சில செய்திகள் தி.மு.க. வட்டாரத்தில் இருந்து வெளிவந்தால் ஆச்சர்யமில்லை!

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2204&rid=100

No comments:

Post a Comment