Friday, January 14, 2011

மைக்ரோ பைனான்ஸ் மகா கொடுமை

‘‘பணம் கொடுக்காவிட்டால் ராத்திரி வீட்டில் தங்குவோம்..!’’
மைக்ரோ பைனான்ஸ் மகா கொடுமை

பத்தாயிரம் ரூபாய் கடன் வேண்டுமா வாங்கிக்கொள்ளுங்கள். வாரா வாரம் சுலபத் தவணைகளில் திருப்பி செலுத்துங்கள்... பரிசுகளும் உண்டு’’

-ஆந்திரத்து மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகளின் தேன் பேச்சில் மயங்கி... இன்று பூச்சிக்கொல்லி மருந்துகளை நாடி தற்கொலை செய்துகொண்டு வருகிறார்கள் வேலூர் மாவட்ட கிராமத்தினர்.

தனி நபர்களிடம் கடன் கொடுத்தால், வசூல் செய்வது கஷ்டம் என்று சொல்லி மகளிர் சுய உதவிக் குழுவினரைக் குறிவைத்திருக்கின்றன இந்த மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகள். குழுவில் ஒருவர் பணம் கட்டவில்லை என்றாலும்கூட அனைவரையும் உட்காரவைத்து, அந்த ஒருவர் பணத்தைக் கொடுத்தால்தான் அனைவரையும் விடுவோம் என்பது அவர்களது வசூல் ஸ்டைலில் ஒன்று.

வேலூரில் ஒரு காலத்தில் வட்டிக்கு கடன் வாங்க மக்கள் வரிசையில் நின்ற காலம் போய் இன்று வீட்டு வாசலிலேயே.. ப்யூச்சர், ஸ்மைல், கிராம விடியல், காவேரி க்ரெடிட் லிமிடட், குரு ஜீவன், ஸ்பந்தனா, அஸ்மிதா, எச்.கே.எஸ்., எஃப்.எஃப்.எஸ்.சி. போன்ற வட்டிக்கு பணம் தரும் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகள் வரிசையாய் வந்து நிற்கின்றன. இவற்றில் பெரும்பாலான கம்பெனிகள் ஆந்திராவைச் சேர்ந்தவை.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் கடன் வசூல் செய்யப் போயிருக்கிறார்கள் மைக்ரோ பைனான்ஸ் ஏஜென்டுகள். ரங்கநாதன் என்பவரின் மனைவி செல்வியிடம் போய், ‘பாக்கி பணம் என்னாச்சு? ரெண்டு, மூணு வாரமா பணம் கட்டலையே?’ என அதட்ட... ‘கைக்குழந்தைக்கு உடம்பு சரியில்லைய்யா... மருந்து மாத்திரைக்கே காசு பத்தலை... எப்படியாவது கொடுத்துடறேன்’ என கெஞ்சியிருக்கிறார் செல்வி.

ஆனாலும்... கொஞ்சம்கூட கருணை காட்டாத அந்த ஏஜென்ட்டுகள் செல்வியின் கையிலிருந்த, பிறந்து சில நாட்களேயான குழந்தையைப் பறித்துக்கொண்டு ஆட்டோவில் கிளம்பினர்.

பணத்தைக் கொடுத்துட்டு குழந்தைய வாங்கிக்க... என ஏஜென்ட்டுகள் அலட்சியமாக சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினர். பருந்துகளிடமிருந்து குஞ்சை மீட்கும் தாய்க்கோழியாய் செல்வி பாய.... ஏஜென்ட்டுகள் தள்ளிவிட்டதில் அப்படியே விழுந்து இறந்துவிட்டார் செல்வி.

இன்னொரு மைக்ரோ பைனான்ஸ் கொடூரம்...

கடந்த டிசம்பர் 24-ம் தேதி சத்துவாச்சாரி பகுதியில் லட்சுமி என்பவர் கடன் தொல்லையால் அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டார். வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி மறுநாள் இறந்துவிட்டார். இறந்துபோன செல்விக்கு 5 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அனாதைகளாக ஆகி விட்டனர்.

லட்சுமியின் மகள் கங்கா நம்மிடம், ‘‘மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிக்காரர்கள் எங்களை மிரட்டியதால்தான் அம்மா விஷம் குடிச்சிடுச்சி. எங்க அம்மா செத்ததும், ‘இந்த பிரச்னையை வெளியில் சொல்லவேண்டாம். எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றோம்’னு பைனான்ஸ்காரர்கள் சொன்னார்கள். ஆனால் அம்மாவை புதைச்ச பின்னாடி அவர்கள் வரவே இல்லை. நாங்க எல்லாரும் இப்போ தெருவுல நிக்கிறோம்’’ என்று சொல்லி அழுதார்.

இப்படியெல்லாம் நடந்தும் போலீஸ் என்ன செய்கிறது?

வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி இந்தக் கேள்விக்கு பதில் தருகிறார்.

‘‘வேலூர் மாவட்டத்தில் பரவலாக மைக்ரோ பைனான்ஸ் கொடூரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மூன்று மாதம் முன்பு சத்துவாச்-சாரியில் ஈஸ்வரி என்ற பெண், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் மைக்ரோ பைனான்ஸ்காரர்களால்தான். நாங்கள் போலீஸிடம் போகப் போவதாக பைனான்ஸ்காரர்களிடம் சொன்னால்... ‘நீ எந்த போலீஸ்கிட்ட போய் சொன்னாலும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது. எல்லாருக்கும் நாங்க பணம் கொடுத்துட்டுதான் இந்தத் தொழிலையே நடத்துறோம்’ என மிரட்டுகிறார்கள்.

இதைவிடக் கொடுமையாக... இரவு பத்துமணிக்கு மேல் வீட்டுக்கு வந்து, ‘பணத்தைக் கொடுக்கலேன்னா ராத்திரி முழுசும் உன் வீட்லயே இருந்துட்டு காலையிலதான் போவேன். உன் மானம் போனா எங்களுக்குக் கவலையில்ல’ என பெண்களிடம் மிரட்டுகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு விடிவே கிடையாதா?’’ என புலம்பினார்.

போலீஸார் மீது சொல்லப்படும் புகார்களை உறுதிப்படுத்தும் விதத்தில்... ‘குழந்தைகளைக் காப்பாற்ற வழி தெரியாத-தாலும் காசநோய் அவஸ்தையாலும் லட்சுமி தற்கொலை செய்துகொண்டார்’ என வழக்குப்பதிவு செய்துள்-ளார்கள் சத்துவாச்சாரி போலீஸார்.

இது குறித்து வேலூர் டவுன் டி.எஸ்.பி., சீத்தாராமனிடம் பேசினோம். ‘‘மைக்ரோ பைனான்ஸ் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

இந்நிலையில், டிசம்பர் 28-ம் தேதி காலை சத்துவாச்சாரி இந்திரா நகர் பகுதியில்... நெல்லூர் நவீன்குமார், சித்தூர் ரமேஷ், சித்தூர் மகேஷ்வர கவுடா உள்ளிட்ட மைக்ரோ பைனான்ஸ் ஏஜென்ட்டுகள் ஐந்துபேரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்-துள்ளனர்.

இதற்கிடையில், பைனான்ஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி ஜனவரி 4-ம் தேதி ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளது ஜனநாயக மாதர் சங்கம்.

இதற்கெல்லாம், போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் மைக்ரோ பைனான்ஸ் கொடுமையை வேலூர் மாவட்டத்தில் ஒடுக்க முடியும்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2217&rid=100

No comments:

Post a Comment