பெரம்பலூர் டூ டெல்லி 5
ஸ்பெக்ட்ரம் ராஜா
மெருகேற்றிய செல்லமுத்து வாத்தியார்!
16-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தென்னகத்து ஜான்ஸி ராணியாகப் போற்றப்படும் ராணி மங்கம்மாவின் ஆளுகையின் கட்டுப்பாட்டில்தான் திருச்சி சமஸ்தானம் இருந்து வந்திருக்கிறது. அந்த சமயத்தில் வட பகுதிகளிலுள்ள சிவ ஆலயங்களை தரிசிக்கச் செல்லும் சிவனடியார்கள் தங்குவதற்கு சத்திரமோ, மடமோ இல்லாமல் பெரும் அவதிப்பட்ட காலம் அது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ராணி மங்கம்மாள் சிவனடியார்களின் துயரத்தைப் போக்கும் விதமாக திருச்சியைத் தாண்டி நாற்பது காத தூரத்தில் நிறைய சத்திரங்களையும், மடங்களையும் நிர்மாணித்திருக்கிறார். இந்த வழியாக சிவ யாத்திரை மேற்கொள்ளும் சிவனடியார்கள் இந்த சத்திரங்களிலும், மடங்களிலும் உண்டு, உறங்கி, இளைப்பாற வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் ராணி மங்கம்மாள்.
ராணியின் இந்த சேவையினால் நெகிழ்ந்து போன சிவனடியார்கள் ராணியைச் சந்தித்து, இந்த சேவைக்கு பிரதியுபகாரமாக ஏதாவது வரத்தை வேண்டும்படி அருளாசி வழங்கியிருக்கிறார்கள். பதிலுக்கு ராணியோ, ‘அடியார்கள் அடியவளுக்கு வரம் அருளுவதை விட ஈசனின் அருளை கானமெடுத்து பாடுவதுதான் என் செவிகளுக்கு பாக்கியம். இந்த சத்திரங்களில் எந்நேரமும் சிவ கீதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பதுதான் இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு’ என சிவனடியார்களிடம் பணிந்து வேண்டியிருக்கிறார். அன்றிலிருந்து அந்த இடத்தில் இருபத்து நான்கு மணி நேரமும் சிவனைப் போற்றி பாடல்களை பல்வேறு சிவனடியார்கள் இசைத்திருக்கிறார்கள். ஓயாமல் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருந்ததால் அந்த இடத்திற்கு பாடலூர் என்று பெயர் வந்திருக்கிறது.
அந்தப் பாடலூர்தான் காலப்போக்கில் மருவி தற்போது பாடாலூராய் வழங்கப்படுகிறது.
பெயர் காரணத்தைத் தவிர, வேறெந்த முக்கியத்துவமும் இல்லாத சாதாரணமான ஊர்தான் பாடாலூர். இருந்தாலும், சுற்று வட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களை இணைக்கும் மையப்புள்ளி என்பதாலும், திருச்சி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதாலும் இந்த ஊர் சற்றே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 1960-களில் இந்த ஊரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று கூடும் சந்தைதான் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் சூப்பர் மார்க்கெட். இதையெல்லாம் விட பெரம்பலூர் வட்டாரத்திலேயே இந்த ஊர் பெயர் பெறக் காரணம் இங்கே, ‘பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி’ இருந்ததுதான். சுற்று வட்டாரத்தில் எங்குமே மேல்நிலைக் கல்வி வழங்கும் பள்ளிகள் இல்லாமலிருந்த நிலையில் இந்த வட்டார மக்களின் எழுத்துக் கனவை நிஜமாக்கியது இந்தப் பள்ளிதான்.
பாடாலூர் பள்ளியில் படிக்கும் போதே ராசா துறுதுறுப்பான ஆள்தான். படிப்பில் ரொம்பவும் சூப்பர் என்று சொல்லமுடியாவிட்டாலும்கூட ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஓரளவு நன்றாகவே படித்திருக்கிறார் ராசா. அதிலும் தன்னுடைய சமயோசித புத்தியாலும், தனித்திறமைகளாலும் பல ஆசிரியர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் ராசா. அப்படி ராசாவால் ஈர்க்கப்பட்ட ஒருவர்தான் செல்லமுத்து வாத்தியார். பாடாலூர் பள்ளியில் ராசா சேர்ந்ததில் இருந்து படிப்பு முடித்து செல்லும் வரை செல்லமுத்து வாத்தியார்தான் ராசாவுக்கான காட்ஃபாதர். பெரியாரின் மீதும், அவருடைய கருத்துக்கள் மீதும், குறிப்பாக பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர் செல்லமுத்து வாத்தியார். வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதே அவ்வப்-போது பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களையும் பாடத்துடன் சேர்த்து மாணவர்களின் மனதில் பதிய வைப்பதில் கில்லாடியானவர் செல்லமுத்து வாத்தியார்.
அவர் மூலமாகத்தான் ராசாவுக்கு பெரியாரின் அறிமுகம் நூல் வடிவில் கிடைக்கிறது. படிப்பில் இருக்கும் ஆர்வத்தைவிட பேச்சிலும், எழுத்திலும் தீராத காதல் கொண்டிருந்தவர் ராசா. அதிலும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் ராசாவுக்கு அலாதி ஆர்வம் இருந்திருக்கிறது. அப்படி ஒருமுறை பேச்சுப் போட்டியில் பெரியாரைப் பற்றிய தலைப்பு வர, செல்லமுத்து வாத்தியாரிடம் பெரியாரைப் பற்றிய புத்தகங்களும், குறிப்புகளும் வாங்கி அந்தப் போட்டியில் அசத்தியிருக்கிறார் ராசா. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தப் போட்டியில் ராசாவின் நெருங்கிய நண்பரான கலைசேகர் முதலிடத்தை வென்றுவிட, ராசாவுக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்திருக்கிறது. அதன்பின்னர் நடந்த பல போட்டிகளில் ராசாவே முதலிடத்தை வென்றாலும்கூட கலைசேகருக்கும் ராசாவுக்குமான நட்பு மட்டும் இணைபிரியாமலேயே இருந்திருக்கிறது. பள்ளிக்கூட காலங்களில் நட்பிற்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கும் ராசா, எப்போதுமே நாலைந்து நண்பர்களுடன் சேர்ந்துதான் சுற்றிக் கொண்டிருப்பாராம். அதிலும் பள்ளி நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்களில் அருகிலுள்ள பெருமாள் மலைக்கு சென்று பொழுதைக் கழிப்பதில் அலாதி ஆர்வமாம் ராசாவுக்கு.
கருங்கல்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்த காரை கட்டடம், முன்புறம் இறக்கி வேயப்பட்டிருந்த கீற்று முற்றம், நாலைந்து தேய்ந்து போன பெஞ்சுகள் என மிகச் சாதாரணமான உணவகம்தான் பாடாலூர் குமார் ஓட்டல். அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு இடையில் வயிற்றுப் பசியை போக்கும் ‘நளன் கூடம்’ இந்த குமார் ஓட்டல்தான். செல்லமுத்து வாத்தியார் மூலமாக ராசாவின் மனதில் விழுந்த திராவிட விதையை ஆழமாய் விதைத்து விறுவிறுவென வளர வைத்தது இந்த ஓட்டல்தான்.
அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, கல்லூரி மேல்படிப்பு என எல்லா கால கட்டங்களிலுமே அரசின் நல விடுதிகளில் தங்கி படிப்பதுதான் ராசாவின் வழக்கம். அப்பா, அம்மாவிற்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதாலேயே இம்மாதிரி அரசின் நல விடுதிகளில் தங்கும் வழக்கத்தை வைத்திருந்திருக்கிறார் ராசா. அப்படித்தான் பாடாலூரிலும் குமார் ஓட்டலுக்கு அருகாமையில் இருந்த அரசு விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்திருந்திருக்கிறார். அப்படி விடுதியில் இருக்கும் போது ஒருநாள் அதிகாலையிலேயே எழுந்த ராசாவின் காதுகளில் கணீரென வந்து விழுந்திருக்கிறது அந்தக் குரல்.
‘அர்ச்சகர்கள் பொறுக்கித் தின்ன ஆலயம், அயோக்-கியர்கள் பொறுக்-கித் தின்ன அரசியல், அதிகாரிகள் பொறுக்கித் தின்ன அரசாங்கம் இப்படியாக இருக்கிற போலி ஜனநாயகத்தில்தான் மானமும், அறிவும் உள்ள மக்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் & வேறு யாரும் செய்ய முன்வராததால் நான் இந்தப் பணியை செய்து வருகிறேன்’ & ஏற்கனவே புத்தகத்தில் படித்திருந்த பெரியாரின் வார்த்தைகள் அவருடைய குரலிலேயே கணீரென வெளிப்பட, குரல் வந்த திசைநோக்கி ஓடியிருக்கிறார் ராசா. விடுதிக்கு அருகாமையில் இருக்கும் குமார் ஓட்டலில் இருந்துதான் பெரியாரின் குரல் ரிகார்டர் ப்ளேயரில் ஒலித்திருக்கிறது. அப்போது சிறுவனாக இருந்த ராசாவுக்கு அந்தக் குரல் யாருடைய குரல் என்று தெரிந்திருக்கவில்லை.
‘அண்ணே, இதுல பேசறது யாருண்ணே..?’ ஓட்டலில் இருந்தவரிடம் ஆர்வமும், ஆச்சர்யமுமாக ராசா கேட்க, ‘இது யாருன்னு தெரியலியா? வைக்கம் வீரர் பெரியாருடைய குரல்தான். அவர்தான் பேசறார்’ என சொல்லவும், ராசாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அங்கேயே உட்கார்ந்து முப்பது நிமிடங்கள் முழுதாக பெரியாரின் உரையைக் கேட்டு விட்டுத்தான் விடுதிக்குப் போயிருக்கிறார். அன்றிலிருந்து தினமும் குமார் ஓட்டலுக்கு வந்து, அரை மணிநேரம் பெரியாரின் உரையைக் கேட்ட பிறகுதான் தினசரி வேலைகளே தொடங்கும் ராசாவுக்கு. பெரியாரை நோக்கி ராசா ரொம்பவும் ஆர்வமாக மாறியதைப் பார்த்த செல்லமுத்து வாத்தியார் ஒருநாள் ராசாவை அழைத்திருக்கிறார்.
‘பெரியார் மேல உனக்கு ரொம்ப ஆசையா ராசா?’ வாத்தியாரின் வார்த்தைகள் முடியும் முன்பே பெரியார் மீது தனக்கிருக்கும் ஆர்வம், தினசரி பெரியாரின் உரைகளைக் கேட்டு கேட்டு தனக்குள் ஊறிய சுயமரியாதைக் கருத்துக்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் வாத்தியாரின் முன் பவ்யமாய் எடுத்து வைத்திருக்கிறார் ராசா. எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்ட வாத்தியார், ‘பெரியாருடைய திராவிடக் கருத்துக்கள் சமூகத்தைச் சுத்திகரிக்கும் ஒரு கருவி. எதிர்காலத்தில் அந்தத் திராவிடப் பாதையில் பயணிப்பதற்கான ஆர்வமும், துடிப்பும் உன்னிடம் இருக்கு. உன்னை திராவிடப் பாதையில் பொருத்திக் கொள்ள உனக்கு கூடுதல் பயிற்சிகள் தேவை. நான் சொல்லும் இடத்திற்கு சென்று பெரியாரைப் பற்றியும், திராவிடக் கருத்துக்களைப் பற்றியும் முறையாகத் தெரிந்து கொள்கிறாயா?’ போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உபதேசித்த கீதா உபதேசம் கணக்காய்த்தான் வாத்தியாரின் வார்த்தைகள் காதுகளில் விழுந்தது ராசாவுக்கு.
கண்களில் ஆர்வமும், உதடுகளில் துடிப்பும், வார்த்தைகளில் ஆசையும் சேர்த்து, ‘நீங்க சொல்ற எடத்துக்கு போறேங்கய்யா...’ பவ்யமாய் சொன்னார் ராசா.
அந்த இடம் எது? சொன்னபடி ராசா அங்கே போனாரா? அங்கே நடந்தது என்ன?
-அலைக்கற்றை ஓய்வதில்லை
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2222&rid=101
No comments:
Post a Comment