திருச்சி : திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், வனத்துறை அமைச்சரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதன்மை செயலர் ஸ்வரன் சிங் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர், அதிகாரி, கட்சி நிர்வாகி என யாராக இருந்தாலும், நேருவை மீறி யாரும் செயல்பட முடியாத நிலை உள்ளது. வனத்துறை அமைச்சர் செல்வராஜ், ம.தி.மு.க.,வுக்கு செல்வதற்கு முன், திருச்சி மாவட்ட தி.மு.க., செயலராக இருந்தார். செல்வராஜ் ம.தி.மு.க.,வுக்குச் சென்ற பிறகு, மாவட்ட செயலரான நேரு, கட்சியில் படுவேகமாக வளர்ந்து, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினிடம் மிகவும் நெருக்கமானார். ம.தி.மு.க.,விலிருந்து தாய் கட்சியான தி.மு.க.,வுக்கு திரும்பிய செல்வராஜ், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று அமைச்சரானார். ஆயினும், கட்சியில் முன்பிருந்த செல்வாக்கு, செல்வராஜுக்கு தற்போது இல்லை. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா, மாநில கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், திருச்சி தேவர் ஹாலில் நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், மத்திய இணையமைச்சர் நெப்போலியன் உட்பட அனைவரும் பங்கேற்பதாக இருந்தது. அமைச்சர் செல்வராஜ், முன்னதாகவே வந்து காத்திருந்தார். அமைச்சர் நேரு வந்ததும், விழா நடக்கும் அரங்குக்கு செல்வராஜ் சென்றார். இதற்கிடையே, “கார் பார்க்கிங்’கில் அமைக்கப்பட்டிருந்த மாநில கண்காட்சியை திறந்து வைக்கும்படி நேருவிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்வராஜ் மேலே சென்றது தெரியாமல், விறுவிறுவென, “கார் பார்க்கிங்’கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குக்கு நேரு சென்றார். “ரிப்பன்’ வெட்டி, கண்காட்சி ஸ்டால்களை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செல்வராஜ், வேகமாக கீழே வந்தார். ஆவேசமாக வந்த செல்வராஜ், “நான் வந்து உங்களுக்காக நீண்ட நேரமாக காத்திருக்கிறேன். உங்க இஷ்டத்துக்கு வந்ததும் கண்காட்சியை திறந்து வைத்தால் என்ன அர்த்தம்?’ என்று நேருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “நீங்கள் இருப்பது எனக்குத் தெரியாது. சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது; தெரியாமல் நடந்துவிட்டது’ என, நேரு சமாதானப்படுத்தினார்.
செல்வராஜின் தீவிர ஆதரவாளரான கைக்குடிசாமி, “இப்படித் தான் வேண்டுமென்றே எங்கள் அமைச்சரை திட்டமிட்டு அவமானப்படுத்துறீங்க…’ என்று எகிறினார். இதைப் பார்த்து டென்ஷனான நேரு, அவரை அதட்டினார். அங்கிருந்த அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர். உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் ஸ்வரன் சிங் தலையிட்டு, இரு அமைச்சர்களையும் சமாதானம் செய்து வைத்தார். மீண்டும், “ரிப்பன்’ கட்டப்பட்டு, அமைச்சர் செல்வராஜ் முன்னிலையில் அமைச்சர் நேரு, “ரிப்பனை’ வெட்டி மீண்டும் கண்காட்சியை திறந்து வைத்தார்.
Source & Thanks : dinamalar
No comments:
Post a Comment