படமே இன்னும் ரிலீஸ் ஆகலை. அதுக்குள்ள எப்படி அந்தப் படத்தின் கதையை சவுக்கு எழுதுகிறது என்று பார்க்கிறீர்களா ?
அந்தப் படத்தில் கதை என்று ஒன்று இருக்கிறதா என்ன ? ஆனாலும், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தால் (நடக்காது பயப்படாதீங்க… ஒரு பேச்சுக்கு) 2011ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த கதை வசனமாகவும், இளைஞனும், கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதில் ஐயம் ஏது.
(சாரி பாஸ் படம் தப்பாயிடுச்சு)
ஆனால் இந்தப் பதிவு இளைஞன் கதைப் பற்றியதல்ல. இளைஞனின் பின்னால் உள்ள கதையைப் பற்றியது. அது மிக மிக சுவராஸ்யமாக இருக்கிறது. படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன். சுவராஸ்யமா இல்லையா என்று.
இளைஞன் படத்தின் தயாரிப்பாளர் யார் ? சான் டியாகோ மார்ட்டின். யார் இந்த சான்டியாகோ மார்ட்டின் ? இவரை சான் டியாகோ மார்ட்டின் என்று சொல்லுவதை விட, ‘லாட்டரி மார்ட்டின்‘ என்றே பிரபலமாக அழைக்கப் படுகிறார்.
மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் தோழர்களே… பர்மாவில் சான்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத காதல் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது.
இப்படித்தான் மார்ட்டினின் வாழ்க்கை தொடங்கியது. பள்ளிப் படிப்பை கூட முடிக்காத மார்ட்டின் இன்று 4000 கோடி ரூபாய் லாட்டரி தொழில் நிறுவனத்துக்கு அதிபதி.
பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலை துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.
சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் பின்னாளில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்ககிறார். கோவை மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின்.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கம் லாட்டரிகளை தடை செய்ததும், மார்ட்டினுக்கு பின்னடைவு என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது.
மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழகத்தில் மார்ட்டினின் சட்டவிரோத கள்ள லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன. மார்ட்டினின் கோயம்பத்தூர், காந்திபுரம் 6வது தெரு, டெய்சி ப்ளாஸா, எண் 355-359 என்ற முகவரியில் மார்ட்னின் லாட்டரி ஏஜென்சி இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம். மார்ட்டினின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி என்று ஒரு நாளிதழ் வருகிறது. நம் தமிழ்நாட்டில் தீக்கதிர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். 2005ம் ஆண்டில் மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனதும், தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது.
தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டே வந்த மார்ட்டின், எஸ்எஸ் ம்யூசிக் என்ற சேனலை விலைக்கு வாங்குகிறார். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு மார்ட்டினின் சட்டவிரோத லாட்டரிகளின் விற்பனைத் தொகை 1.5 கோடி ரூபாய்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மார்ட்டின் சட்டவிரோத லாட்டரிகள் விற்றதற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப் படுகிறது. அந்த வழக்கில் மார்ட்டின் முன்ஜாமீன் பெறுகிறார். இன்றும் மார்ட்டின் முன்ஜாமீனில்தான் உள்ளார்.
இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை ஆட்டையை போட்டு விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாஸூக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகிறார். பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார்.
பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் ஏற்பாடு செய்கிறார்.
தொடர்ந்து சோதனைகள் நடந்ததும், மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் அடி வாங்குகிறது. பணம் நஷ்டமாகிறது.
அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயாஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நம்பி தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கிறார். மார்ட்டின் முதலில் அணுகியது, கருணாநிதியின் மகள் செல்வி. செல்வியோடு தொடர்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை.
ரஜினிகாந்துடன் மார்ட்டின்
அப்போதுதான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்பு கிடைக்கிறது. பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் கருணாநிதியிடம் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.
மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானதுதான் இளைஞன்.
கருணாநிதி, தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கையில், ‘தற்போது தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்கு கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப் பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்‘ என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் அல்ல….. கள்ள லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கொடுத்த லஞ்சம்.
இது தொடர்பாக மற்றொரு செய்தியைச் சொன்ன கருணாநிதி, இளைஞன் படம், ஒரு லோ பட்ஜெட் படம் என்றார். உண்மையில் இந்த படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா… ? 50 முதல் 60 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் கப்பல் செட் போட மட்டும் 14 கோடி ரூபாய் செலவிடப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் கேரளாவில் நடந்த சம்பவத்தை பார்க்க வேண்டும். கேரள நாட்டில் இஷாக் என்பவர், பூட்டான் மாநில லாட்டரிகள் 10 வாங்குகிறார். அந்த லாட்டரிகளை பரிசீலித்ததில், அத்தனையும் போலி என்று அறிந்த இஷாக், மார்ட்டின் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கேரள மாநிலத்தின் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இருப்பதால், நீதித்துறை நடுவர், கோட்டை காவல் நிலையத்திற்கு மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறார்.
அடுத்த வழக்கை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனே பதிவு செய்ய உத்தரவிடுகிறார். இதையடுத்துதான், மார்ட்டின் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த வழக்கில் தான் முதலில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்க்வி ஆஜராகிரார். கேரளா முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து, சிங்வி வழக்கிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார். அடுத்ததாக மார்ட்டினுக்காக ஆஜரானவர் தான் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். கருணாநிதி சொல்லாமல் பி.எஸ்.ராமன் கேரளா சென்றிருக்க மாட்டார். ஆனால் மார்ட்டினுக்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜரானதும், எழுந்த கடும் சர்ச்சையை ஒட்டி, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், ராமன் எப்படி மார்ட்டினுக்காக ஆஜராகலாம் என்று கருணாநிதிக்கு கடிதமே எழுதினார்.
ஆனால், இந்தக் கடிதத்தையும் கண்டு கொள்ளாத கருணாநிதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் ராமன் செய்தது தவறே அல்ல என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டார். அது தவறு என்று கருணாநிதி எப்படி சொல்ல முடியும் ? அனுப்பியதே கருணாநிதி அல்லவா ?
இந்தப் படத்தின் விநியோகஸ்த உரிமையை வாங்கியிருக்கும் சிவப்பு பூதம் நிறுவனம் (அதாங்க ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்) படத்திற்காக பத்து பைசாவை மார்ட்டினுக்கு கொடுக்கவில்லை என்பது கொசுறு செய்தி. இந்தப் படத்தை எப்படியாவது வெற்றிப் படம் ஆக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேடம் அடுத்து நீங்க மார்ட்டின் தயாரிப்புல, "அலைக்கற்றை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" ன்னு ஒரு படம் எடுங்க மேடம்.
அருமையான ஆடு ஒன்னு சிக்கிருக்கு. வேஸ்ட் பண்ணக் கூடாது மேடம்
இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மார்ட்டின் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இப்படிப் பட்ட ஒரு மோசமான குற்றவாளி ஒரு படத்தை தயாரிக்கிறார், அதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கதை வசனம் எழுதுகிறார், அவனோடு சேர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார், அவனிடம் 45 லட்சம் ஊதியம் பெற்றேன் என்கிறார்.. …. இதையெல்லாம் கருணாநிதியால் செய்ய முடியும். ஆனால் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்றால், ‘ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும்‘ என்கிறார்.
மார்ட்டின் கருணாநிதி உறவு, இத்தோடு முடியவில்லை. கருணாநிதியின் கதை வசனத்தில் வெளி வரும் அடுத்த படமான "பொன்னர் சங்கருக்கும்" மார்ட்டின் தான் தயாரிப்பாளர்.
இந்த அக்கிரமம் உலகில் எங்காவது நடக்குமா ?
No comments:
Post a Comment