Monday, January 3, 2011

போஃபர்ஸ் பீரங்கி பேரம்: வின்சத்தா, குவாத்ரோச்சிக்கு ரூ. 41 கோடி கமிஷன்

புதுதில்லி,ஜன. 3: இந்திய ராணுவத்துக்கு போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்திய தொழிலதிபர் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் ரூ. 41 கோடி கமிஷன் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரி தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த கமிஷன் தொகைக்கு உரிய வரியை அவர்கள் இருவரும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

வருமான வரித்துறைக்கு எதிராக வின்சத்தா மகன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பாய நீதிபதிகள் ஆர்.சி. சர்மா, ஆர்.பி. தொலானி ஆகியோர் இவ்வாறு தீர்ப்பு அளித்தனர்.

ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கமிஷன் தொகை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்திக்கு நெருங்கிய நண்பரான இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சி மற்றும் இந்திய தொழிலதிபர் வின்சத்தாவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து இந்தப் புகார் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதுபோல் மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) விசாரித்தது.

இந்த நிலையில்,குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதால் இந்த வழக்கை சிபிஐயால் தொடர முடியவில்லை.

இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் வருமான வரித்துறைக்கு எதிராக வின்சத்தா மகன் தொடர்ந்த வழக்கில் வின்சத்தாவுக்கும் இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் கமிஷன் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரி தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

1987-88 மற்றும் 1988-89-ம் ஆண்டுகளுக்காக ரூ. 52 கோடியே 85 லட்சம் வின்சத்தாவிடமிருந்து வருமான வரித்துறை கோரியதை எதிர்த்து அவரது மகன் வருமான வரி தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ரூ. 41 கோடி கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் தொகைக்கு உரிய வரியை அவர்கள் இருவரும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பாய உத்தரவு விவரம்: பீரங்கி பேரத்தில் இடைத் தரகர்கள் இல்லை என்று போஃபர்ஸ் நிறுவனம் மறுத்தாலும் இந்திய ராணுவத்துக்காக ரூ. 1,437 கோடிக்கு பீரங்கி வாங்கியதில் கமிஷன் கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒப்பந்த தொகையிலிருந்து கமிஷன் தொகையை போஃபர்ஸ் நிறுவனம் கழித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அரசு கூடுதலாக ரூ. 41 கோடி செலுத்தி உள்ளது.

கமிஷன் தொகை ரூ. 32.66 கோடி பணம் பனாமாவைச் சேர்ந்த ஸ்வென்ஸ்கா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது வின்சத்தாவுக்கு கொடுக்கப்பட்ட பணம். இந்தப் பணம் ஜெனிவாவில் உள்ள சுவிஸ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் ரூ. 8.57 கோடி பணம் ஜெனிவாவில் உள்ள ஏ இ சர்வீஸ் லிமிடெட் என்று நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் போஃபர்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானதுக்கு சில நாள்களுக்கு முன்னதாக திறக்கப்பட்டுள்ளது.

பீரங்கி பேரத்தில் இடைத்தரகர்கள் யாரும் நியமிக்கப்படக் கூடாது என்று இந்திய அரசு நிபந்தனை விதித்தும் குவாத்ரோச்சிக்கு வேண்டப்பட்ட ஏ.இ. நிறுவனத்துடன் போஃபரஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் மைலேஸ் டிவிடலேவை குவாத்ரோச்சி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்துக்கும் போஃபர்ஸ் பீரங்கி நிறுவனத்துக்கும் இடையே கமிஷன் பேர உடன்பாடு இறுதியாக்கப்பட்டுள்ளது.

வின்சத்தா போஃபர்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டாக நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகளும் பிற விசாரணை அமைப்புகளும் விசாரித்ததில் வின்சத்தா தாக்கல் செய்துள்ள வருமான கணக்கில் காட்டப்பட்டதை விட அதிக தொகை போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் அவருக்கு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

போஃபர்ஸ் நிறுவனம் ரூ. 28 முதல் 42 கோடி வரை தனது முன்னாள் இந்திய ஏஜென்டுக்கு வழங்கி இருப்பதை ஸ்வீடன் தேசிய தணிக்கைத் துறை உறுதி செய்துள்ளது.

கமிஷன் தொகை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள யூனியன் வங்கியில் வெடெல்சன் ஓவர்சீஸ் என்ற பெயரில் உள்ள கணக்குக்கும் கோல்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் உள்ள கணக்குக்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த இரு கணக்குகளும் குவாத்ரோச்சி மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ளவை .

இந்த வங்கி கணக்கில் குவாத்ரோச்சி தனது இந்திய முகவரியைத் தெரிவித்துள்ளார். இந்த முகவரி போலியானது என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது என்று தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

http://dinamani.com

No comments:

Post a Comment