Tuesday, January 4, 2011

குவாத்ரோச்சி வழக்கு குறித்து அரசிடமிருந்து புதிய உத்தரவு எதுவும் வரவில்லை: சிபிஐ

புதுதில்லி, ஜன.4: போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் இத்தாலியத் தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததது. தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி வினோத் யாதவ் முன்பு இதற்கான நடைமுறைகள் தொடங்கியபோது, சிபிஐயின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்தார். வருமான வரித் தீர்ப்பாயத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதி வினோத் யாதவ், இந்த விவகாரத்தில் அரசிடம் இருந்து புதிதாக அறிவுரைகள் ஏதும் வந்ததா என சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ராவிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த மல்ஹோத்ரா, அரசிடம் இருந்து அறிவுரைகள் ஏதும் வரவில்லை என்று தெரிவித்தார்.

வருமான வரித்தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியானதையடுத்து இந்த விவகாரத்தை அரசு மறு ஆய்வு செய்யும் என சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி கூறியிருந்ததை அகர்வால் நீதிபதி வினோ்த் யாதவிடம் சுட்டிக்காட்டினார்.

அகர்வாலின் வாதங்களுக்குப் பிறகு, சட்ட அமைச்சரின் அறிக்கை தொடர்பாக உங்களது கருத்தை அறிய விரும்புவதாக மல்ஹோத்ராவிடம் நீதிபதி தெரிவித்தார்.

சட்ட அமைச்சரின் அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தபின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் மல்ஹோத்ரா நீதிபதியிடம் தெரிவித்தார்.

www.dinamani.com

No comments:

Post a Comment