Monday, January 3, 2011

கலைஞரின் மஞ்சள் (துண்டு) மகிமை

சென்றவாரம் தினமலரில் கலைஞர் டிவியில் வரப்போகும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பற்றிய ஒரு கணிப்பு (கிசுகிசு என்று வைத்துக் கொள்ளுங்களேன்) போட்டிருந்தார்கள். இன்று மிகப்பெரிய விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் கொடுத்து இந்த கிசுகிசு நிச்சயப்படுத்தபட்டிருக்கிறது.

கலைஞர் டிவி ஒரு கொள்கையும் இல்லாமல் காசுக்காக குத்துப்பாட்டு காட்டும் சேனலாக கருணாநிதியின் திட்டத்தோடு வருகிறது.

அழுது வடியும் சீரியல்கள், டப்பாங்குத்து பாட்டு வரிசை, திரைப்பட மசாலா மற்றும் அரைகுறை ஆட்ட நடிகைகளின் தமிழ்க்கொலை என்று வழக்கமான எல்லா அம்சங்களையும் இங்கும் காணப்போகிறோம் போல இருக்கிறது.

இந்த சேனல் எதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் இந்த நிகழ்ச்சி நிரலை பார்த்து அந்த சந்தேகம் தீர்ந்திருக்கும்.

கலைஞர் பெயரை உபயோகித்துக்கொண்டு எல்லா காசையும் தன்னிடம் முடக்கி அசுரத்தனமாக கொழுத்துவிட்ட மாறன்களின் கல்லாப்பெட்டியை பார்த்து பெருமூச்சு விட்டு அது மாதிரி இந்த வயதான காலத்திலும் தன் வீட்டிலும் ஒரு பெட்டி பார்க்க எழுந்த ஆசையே இது.

கிட்டத்தட்ட 70 சதவீதம் சீரியலாலியே நிரம்ப போகிறதாம், இந்த சேனல்.

சன் டிவியிலிருந்து கட்சி தாவிய பால்மாறி கும்பலகளின் தலைவராக பாலசந்தர் ஒரு சீரியல், ஏவிஎம் நிறுவனம் ஓரிண்டு சீரியல், பாரதிராசாவின் ஒரு சீரியல் (வேறென்ன, சீரியலின் பெயர் “தெக்கத்தி பெண்ணு”) என்று பட்டியல் நீளுகிறது.

பகுத்தறிவுப்பாசறையில் கருணாநிதியின் இந்த கொள்கை முரசு ஒரு பக்தி சீரியலையும் ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறதாம்.

தமிழ் சேனல்களைப்பற்றி தெரியாதவர்களுக்கு - பக்தி சீரியல் என்றால் ஆன்மீகம், தத்துவம், இறையண்பு என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். பக்தி சீரியல் என்றால் நிறைய குங்குமம், நாக்கையும் கண்ணையும் நீட்டும் அம்மன் சிலை, ஒரு மந்திரவாதி, புகையில் இரவில் லைட் அடித்து பல காட்சிகள், டன்டனக்கா இசை, அபலையான பக்தி நாயகி, சில்லரை கிராபிக்ஸ், விட்டலாச்சாரியா கற்பனை என்று இருப்பதுதான் இன்று சேனல்களின் “பக்தி”.

கலைஞரின் பக்தி சீரியலுக்கு அம்சமாக “மஞ்சள் மகிமை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கதை வசனம் யாரென்று தெரியவில்லை.

கலைஞரே எழுதுகிறார் என்று சொல்கிறார்கள். சான்ஸ் இருக்கிறது.

கருணாநிதி அவருக்குத்தான் மஞ்சளின் மகிமை நன்றாக தெரியும். இந்த முதியவரின் மூடநம்பிக்கைகளில் முக்கியமானது “மஞ்சள் மகிமை”.

அவர் தன் பெயரிலேயே எழுதுவாரா – இல்லை ஆபாச பாட்டுகளை எழுத உபயோகிக்கும் இந்திரஜித் அல்லது வேறு ஏதாவது ஒரு புனைப்பெயரில் எழுதுவாரா என்பதுதான் இனி பார்க்க வேண்டும்.

மஞ்சள் மகிமை யின் கதை நமக்கு தெரியாததால் நமக்கு இருக்கும் துப்பறியும் திறமையை உபயோகித்து, மிக ரகசியமான சில தொடர்புகளை உபயோகித்து, திரு இந்திரஜித் (அதாங்க கலைஞர்) அவர்களிடம் பேசி இந்த சீரியலின் கதையை இப்படி தெரிந்துகொண்டோம்.

இணையத்தில் ஸ்கூப். இதோ “மஞ்சள் மகிமை” கதை. கதை, வசனம், இயக்கம் – இந்திரஜித்.

காட்சி 1

கதையின் நாயகி மூக்காள் தன் பரம்பரை எதிரி பச்சையம்மாவால் மிகுந்த இடையூறுகளை சந்தித்து வருந்துகிறாள். பச்சையம்மாவின் அடியாட்கள் கணவருக்கு பணி செய்துகொண்டிருக்கும் மூக்காளை இரவோடு இரவாக இழுத்துக்கொண்டு போய் ஆற்றில் தள்ளுகிறார்கள். மூக்காளின் “அய்யா கொல்றாங்களே” ஓலம் நெஞ்சை பிளக்கிறது.

சிரியல் பார்க்கும் பெண்களின் கண்ணீர் பெருகுகிறது.

காட்சி 2

பச்சையம்மாளின் அராஜகங்கள் அளவுக்கடங்காமல் போகவே, மூக்காள் அவள் குலதெய்வம் வெங்காயமுனியிடம் நெஞ்சுறுகி கெஞ்சுகிறாள். நூற்றியெட்டு வெங்காயங்களை படையல் போட்டு கையில் கொஞ்சும் காசு கொடுத்து விரதம் இருக்கிறாள். வெங்காயமுனி பிரசன்னமாகி காட்சி கொடுக்கிறார்.

மூக்காளுக்கு ஒரு மஞ்சள் துண்டு பரிசளிக்கிறார். “இந்த மஞ்சள் துண்டை நீ எப்போதும் அணிந்து பச்சையம்மாளின் சதியை முறியடிப்பாய்” என்று வரம் கொடுக்கிறார்.

காட்சி – 3

மூக்காள் தினமும் மஞ்சள் துண்டுக்கு பூசை செய்கிறாள். தன் வாழ்வு மலர்ந்தால் மஞ்சள் துண்டுக்கும் வெங்காய முனிக்கும் ஒரு லட்சம் டிவி படைக்கிறேன் என்று வேண்டிக்கொள்கிறாள். தள்ளாடி தள்ளாடி ஒவ்வொரு கோவிலாக போய் அந்த மூக்காள் கெஞ்சும்போது பார்க்கும் எல்லோருக்கும் கண்ணில் கண்ணீர் மல்குகிறது.

இறுதியில் பக்தி வெல்கிறது. மஞ்சள் துண்டின் மகிமையால் பச்சையம்மாளின் அராஜகம் ஒழிந்து மூக்காளுக்கு நல்ல காலம் பிறக்கிறது.

காட்சி – 4

மூக்காளின் நல்ல வாழ்வை பிடிக்காத அவள் சக்களத்தி தைலநாயகி தினமும் ஒரு சதித்திட்டம் தீட்டி மூக்காளை முடித்துவிடப்பார்க்கிறாள்.

மூக்காள் புதிதாக கட்ட இருக்கும் வீட்டை தெரிந்துகொண்டு அங்கு போய் குப்பை போடுகிறாள். தினசரி மூக்காளை தூங்க விடாமல் வீட்டு வாசலில் சண்டை போடுகிறாள். மூக்காளுக்கு தேவபானம் பிடிக்கும். தினமும் பூசையில் வெங்காயமுனிக்கு படைத்துவிட்டு இரண்டு பெக் பிரசாதமாக போடுவாள். அவ்வளவு பிரியமான தேவபான கடைகளை ஊரில் யாரும் நடத்தகூடாது, மூக்காளுக்கு கொடுக்ககூடாது என்று கூச்சல் போடுகிறாள்.

அது மட்டும் இல்லை. மூக்காள் வேலைக்கு போகிற வழியெல்லாம் மரங்களை வெட்டி வெட்டி போட்டு கலாட்டா பண்ணுகிறாள்.

இந்த காட்சிகளை பார்த்து, தைலம்மாளின் இந்த விரோதத்துக்கு என்ன காரணம் என்று தாய்மார்கள் துடித்துப்போய்விடுவார்கள் என்று நம்பிக்கையாக சொல்கிறார் இந்திரஜித்.

தைலம்மாவின் விரோதத்துக்கு காரணமாக ஒரு நாற்பது எபிசோடில் ஒரு பிளாஷ்பேக் வருகிறதாம். அதாவது, மூக்காள் தனக்கு மஞ்சள் துண்டு கிடைத்ததும், தைலம்மாளின் பிரிய பிள்ளையை புறக்கணித்து தன் பிள்ளைக்கே தயிர்சாதம் குழைத்து குழைத்து ஊட்டுகிறாளாம். அதைப்பார்த்து வெகுண்ட தைலநாயகி மூக்காள் கதையை முடிக்கிறேன் என்று சபதம் செய்து ரகசியமாக பச்சையம்மாளோடு பேசுகிறாளாம்.

இந்த காட்சிகளை பார்க்கும் எல்லா பெண்களுக்கும் இந்த இடம் மிகுந்த வருத்தத்தை கொடுக்கும் என்கிறார் இந்த சீரியலின் வசனகர்த்தா இந்திரஜித் அவர்கள்.

இந்த நாலு காட்சிகளும் ஒரு 200 எபிஸோட் இழுத்துக்கொண்டு போகுமாம்.

அதற்கு பிறகு கதை எப்படி போகும் என்று ஆவலோடு வீட்டில் எல்லா பெண்களும் காத்திருப்பார்கள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தயாரிப்பாளர்.

அந்த 200 எபிஸோடுக்கு பிறகு தமிழகத்தில் தேர்தல் வருமாம். அதில் மஞ்சள் துண்டின் மகிமை மறுபடி எடுபடுமா இல்லை பச்சையம்மாளின் கை ஓங்குமா, தைலநாயகி திருந்துவாளா அல்லது பச்சையம்மாளோடு ஓடிப்போவாளா என்பதே இந்த கதையின் கிளைமாக்ஸ்.

ஆவலோடு பாருங்கள் கலைஞர் டிவி!

http://jayaraman.wordpress.com/2007/09/07/kalaignartv/

No comments:

Post a Comment