Monday, January 3, 2011

ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

கடந்த வாரம் மலையாள தேச தொலைக்காட்சிகளில் ஒரே பரபரப்பு ! சூடான செய்திகள் – விவாதங்கள் ! சரி – விஷயம் உறுதியாகட்டும் – நம்பகத்தன்மை தெரிந்த பிறகு நாம் எழுதுவோம் என்றிருந்தேன். (இல்லையென்றால் – நண்பர் கண்பத் மறுமொழி போட்டு மிரட்டுவாரே !)

நேற்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஈ.ஆர்.கிருஷ்ணைய்யர் மத்திய சட்ட அமைச்சருக்கு இந்த விஷயம் குறித்து திறந்த மடல் எழுதியது உறுதியான பிறகு - இதை எழுதுகிறேன்.

ஸ்ரீநிஜ் என்பவர் கேரளாவில் வழக்குரைஞராக பணி புரிகிறார். கடந்த 2006 ல் நடந்த கேரள சட்டசபை தேர்தலில் இவர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டி இட்டார். தோல்வியுற்றார் ! இது விஷயம் அல்ல. பின்னணி மட்டுமே !

இந்த தேர்தலில் அவர் போட்டியிட்டபோது தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்து விவரங்களில் தன் மொத்த சொத்து மதிப்பு வெறும் 25 லட்சம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு 2007 லிருந்து 2010 க்குள்ளாக அவர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக மலையாள சானல்கள் இப்போது பல சான்றுகளைக் காட்டி குற்றம் சுமத்தியுள்ளன.

திருச்சூர் உயர் நீதிமன்றம் அருகேயுள்ள முக்கியமான குடியிருப்பு பகுதி அன்னமடா என்ற இடத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலமும், கொச்சி அருகே எலமகக்கரா என்கிற இடத்தில் மிக விலை மதிப்பு மிக்க இடத்தில் 25 செண்ட் நிலமும், இவற்றைத்தவிர பங்களூரிலும், சென்னையிலும் பல சொத்துக்களையும் இவர் இந்த 3 வருடங்களுக்குள் வாங்கிக் குவித்து இருப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சரி - இப்படி எத்தனையோ குவிப்புகள் நாடு முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இதில் மட்டும் என்ன விசேஷம் என்று கேட்கலாம் !

விசேஷம் என்ன என்றால் – அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மகள் சோனி என்கிற மங்கையை மணந்த மணாளன் இந்த ஸ்ரீநிஜ் என்பது தான் !

திருவாளர் ஸ்ரீனிஜ் சொந்தமாக சம்பாதித்து இந்த சொத்துக்களை வாங்கி இருந்தால் அது செய்தியே இல்லையே !

தன் மாமனாரின் பினாமியாகச் செயல்பட்டு - அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருந்த காலத்தில் இவர் வாங்கிக் குவித்தவை தான் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இந்த சொத்துக்கள் என்பது தான் தொலைக்காட்சிகளின் குற்றச்சாட்டு !

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், புகழ் பெற்ற சமூக நீதி போராளியுமான 97 வயது கிருஷ்ணையர் தான் – இப்போது மத்திய சட்ட அமைச்சருக்கு இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி கோரி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தின் நகலை பத்திரிகைகளுக்கும் அனுப்பி இருக்கிறார். எல்லாம் சரி – இதில் ஸ்பெக்ட்றம் ராஜா எங்கிருந்து வந்தார் என்கிறீர்களா ?

(நீதிபதி ரகுபதியை ராஜா மிரட்டியது, அது குறித்து சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கோகலே அவர்கள் உச்ச நீதி மன்றத்திற்கு புகார் அனுப்பியது - அப்போது பதவியில் இருந்த பாலகிருஷ்ணன் முதலில் அத்தகைய ரிப்போர்ட் எதுவும் வரவில்லை என்றது - பின்னர் ரிப்போர்ட் வந்தது ஆனால் அதில் அமைச்சர் ராஜாவின் பெயர் குறிப்பிட்டிருக்க -வில்லை என்று மழுப்பியது – நீதிபதி கோகலே தன் ரிப்போர்ட்டில் அமைச்சர் ராஜாவின் பெயர் நிச்சயமாக கடிதத்தின் இரண்டாவது பாராவில் குறிப்பிடப்பட்டிருந்ததை மீண்டும் உறுதி செய்தது - பின்னர் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் பத்திரிகையாளர்கள் வினவியபோது - இதில் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது உச்ச நீதி மன்றம் தான் என்று கை காட்டியது - பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதோடு இந்த விஷயத்தையும் “குளோஸ்” பண்ணியது – )

அப்பாடா – இப்போது புரிந்திருக்குமே- ராஜாவுக்கும் - பாலகிருஷ்ணனுக்கும் – (அதாவது அவர் மாப்பிள்ளை ஸ்ரீநிஜ் க்கும் -) என்ன நெருக்கம் இருந்திருக்க முடியும் என்பது !!!

ராஜாவின் கொடை உள்ளம் தான் தெரியுமே ! சம்பாதித்ததை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற குறுகிய எண்ணம் இல்லாதவர். தலைவரையும் அவர் குடும்பத்தையும் மறவாதவர் !

பரந்து, விரிந்த சாம்ராஜ்ஜியம் அவருடையது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆஸ்திரேலியா என்று பல இடங்களுக்கு விரிந்த அவர் ஆளுகை தன் நண்பரின் பொருட்டு திரிச்சூர் சென்றது பெரிய விஷயமா என்ன ? )

https://vimarisanam.wordpress.com/2010/12/29/

1 comment:

  1. உங்களூக்கு தெரிந்ததை எழுதியதற்கு பாராட்டுக்கள்...இந்த 2G பேய்க்கு நிறைய கைகள் இருக்கின்றன் அவை தானாக வெளியே வரும்.

    திருடன்
    www.thirudan.com

    ReplyDelete