Thursday, January 6, 2011

கருணாநிதியின் அரசியல் புரட்டு வாழ்க்கை

திராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டி -ருந்தார்கள். பெரியார் வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் பெரியாரும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தா -லும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய கரிஷ்மா அனைவரையும் கவர்ந்தது. அண்ணாவும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திராவுக்கு மொரார்ஜி, கலைஞருக்கு நாவலர். இந்திராவுக்கு காமராஜ், கலைஞருக்கு ராஜாஜி. இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, கலைஞருக்கு அழகிரி. ராஜீவ் போல ஸ்டாலின்.

அவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.

ஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாக -த்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணா அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.

பதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணா இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணா, நாவலருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.

1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த சிம்பதி, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா இறந்தவுடன் எல்லாரும் நாவலர்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நாவலர் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை பெரியாருக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நாவலரை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜியார், அண்ணாவின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.

அது வரை அருமையாக கணக்கு போட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்பு கணக்கு. (சின்ன தப்பு கணக்கு சோவை அடக்கி விடலாம் என்று நினைத்தது)

மிசா சமயத்தில் ஜேபி, மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், சிட்டிபாபு செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.

அவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.

84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை தண்ணியிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.

எம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.

ஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச்! அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.

91இல் ராஜீவ் சிம்பதி அலையில் ஜெ ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.

சசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெ யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.

அவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். ஜென்டில்மன் மூப்பனாரும் பேசவில்லை.

96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். க்ரிடிக் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்?) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது? நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.

2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள்? அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)

இன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரிடையர் ஆகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

கட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள்? அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான்? அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)

கலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.

பல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவரை அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.

http://koottanchoru.wordpress.com/2009/02/14/

1 comment:

  1. a very good article,

    explaing what happened in the tamil politics,

    it's really good to know the roots of the tamil political partys.

    vinoth, pudukkottai, tamil nadu, india,

    ReplyDelete