Monday, January 3, 2011

மனு நீதி சோழன் கருணாநிதி

திணமனியின் இந்த கட்டுரை இங்கே மீள்பதிப்பு

கருணாநிதியின் புதிய மனுநீதி!

பழ. கருப்பையா
அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் “அரசு அப்பல்லோவையே’ தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்’ பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை “முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு’

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

“முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது’ முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். ” என்ன விலை? என்று கேட்டேன். “கட்டு அஞ்சு ரூபாய்’ என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. “ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க’ என்றாள்.

“முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை’ என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி’ “முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

“அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. “இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்.” அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்’ என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

“அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

“வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

“முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை’ என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், “உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?’ என்று கேட்டேன்.

“இருபத்தைஞ்சு ரூபாய்’ என்றாள்.

“அவள் ஐந்து ரூபாய்’ என்கிறாள். நீ “இருபத்தைந்து ரூபாய்’ என்கிறாயே என்றேன்.

“”அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, “பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்’ என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் “உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்’ என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், “இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.

இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி,
சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. ” ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?’ என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!

http://jayaraman.wordpress.com/2008/12/18/newmanu/


No comments:

Post a Comment