Monday, January 3, 2011

பகுத்தறிவாளர் கமல ஹாசன் அவர்கள் பார்வைக்கு

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

ன்றைய தேதியில் ஒருவன் தமிழ்நாட்டில் தன்னை வீரனாக, பகுத்தறிவாளனாகக் காட்டிக்கொள்ள மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. இந்து தருமத்தை பழிப்பது; இந்து நம்பிக்கைகளை, சடங்குகளைக் கிண்டல் செய்வது என்பதுதான் அது. இதில் புதிதாக இணைந்திருப்பவர் ஒரு திரைப்பட நடிகர். உலக திரைப்படங்களை உல்டா செய்து தமிழில் எடுப்பதால் தன்னை உலக நாயகனாக நினைப்பவர்.

இந்து சமுதாயத்தில் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கணவன் நலனுக்காக அல்லது நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்.

இந்து இயக்கங்கள் கொதித்தெழுந்து இதனை விமர்சிக்கும். ஆனால் இதில் ஆபத்து கிடையாது; விளம்பரம்தான் உண்டு. கலை சுதந்திரத்துக்காக எதற்கும் தயாராகும் தியாகி என்று தன்னை காட்டிக் கொள்ளவும் இதில் வழி உண்டு. எந்த ஆபத்தும் இல்லாமலே தியாகி பட்டம் வேண்டுமா? தாக்குங்கள் இந்து நம்பிக்கைகளை. ஆபாசத்தை கலையாக சந்தையில் விற்க வேண்டுமா? போடுங்கள் பகுத்தறிவு முகமூடியை. மனசாட்சியை விற்ற இந்த ஆபாசக் கூத்தடிப்பில் உலகநாயகனே தான் நம்மவர்.

andal

ஆனால் இங்கு கேள்வி அதுவல்ல. இது ஆபாசம் என தெரிகிறது. ஆனால் இந்த ஆபாசத்தை வரலட்சுமி நோன்புடன் இணைக்கும் போது என்னவித சால்ஜாப்பு சொல்லப் படுகிறது என்பதுதான் பார்க்கப்பட வேண்டும். ‘ஆண்டாள் பாடியதில் இல்லாததையா நான் சொல்லிவிட்டேன்?’ ‘கோவில் சிற்பங்களில் ஆபாசம் இல்லையா?’ எனவே இந்த ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் இந்து மதத்தை புரிந்து கொண்டவர்கள் இல்லை. அவர்கள் வெறுமனே மதவெறியர்கள். இந்து தலிபான்கள்!

ஒரு சராசரி தமிழன் இந்த வாதத்தில் உள்ள மோசடி 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடிக்கு சற்றும் குறையாத மோசடி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?

இதைப் புரிந்துகொள்வதற்கு முன், ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது காமம் எனும் அடிப்படை மானுட உணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உன்னத உணர்வாக உயர்த்துவது.

காதலிகளின் காதலனாக இறைவனைக் கூறும் முதல் உலக இலக்கியமாக ரிக் வேதத்தை சொல்ல முடியும்.

“காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” (ரிக்: 10.91.13)

“மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” (ரிக் 3.62.8)

மனைவி கணவனது மேனியைத் தீண்டுவது போல அல்லது முத்தமிடுவது போல, தமது மந்திரங்கள் இறைவனைத் தீண்டுவதாக ரிக் வேத கவிதைகள் தம்மைத் தாமே வர்ணிக்கின்றன (ரிக். 3.41.5) வேத மந்திர ரிஷிகள் ஆதி கவிஞர்கள். மனதாலும் இதயத்தாலும் பரம்பொருளுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாகக் காட்டப்படுகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேதக் கவிதைகளும், மந்திரங்களும் பிரார்த்தனைகளும் சித்தரிக்கப்படுகின்றன (ரிக் 1.62.11; 1.82.5-6; 1.186.7; 1.32.3; 4.32.16; 1.9.4; 3.39.1)

இவையெல்லாம் ஞானத்தேடலின், இறை அனுபவத்தேடலின் கவித்துவ வெளிப்பாடுகள். இம்மரபின் நீட்சியே ஆண்டாளின் பாசுரங்கள். இம்மரபு மானுடப் பண்பாடெங்கும் உள்ளது. யூத ஞானப்பாடல்களில் நாம் இதை காணலாம்; அவ்லோனின் தெரசா (St. Teresa of Avlon) எனும் கிறிஸ்தவ மறைஞானியின் பாடல்களில் காணலாம். பாஸ்ரா பட்டணத்து சூஃபி ஞானி ரபியாவின் பாடல்களில் காணலாம். ஆனால் அந்த பண்பாடுகளில் இந்த மறைஞான மரபு ஒதுக்கப்பட்டது அல்லது ஒடுக்கப்பட்டது, எனவே வளராமல் அழிந்து விட்டது. இந்து பண்பாட்டில்தான் அது தழைத்து வளர்ந்தது.

இன்றைக்கு உலக இலக்கிய மரபிலும் சரி, மதங்கள் கடந்த ஆன்மிக மரபுகளிலும் சரி, ஆண்டாளுக்கும், ரபியாவுக்கும், அவ்லோனின் தெரசாவுக்குமான இடம் முக்கியமானது. ஆனால் நாயகி-நாயக ஆன்மிக உணர்வு நிறுவன மதத்தால் ஒடுக்கப்பட்ட அந்த பண்பாடுகளில் கூட, இன்று ரபியாவோ அவ்லோனின் தெரசாவோ ஆபாச சினிமா பாடல்களுக்கு சால்ஜாப்பாக பயன்படுத்தப் படுவதில்லை.

அடுத்ததாக கோவில் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம்.

khajuraho_sculptures_20070528

கோவில் தூண்களிலும் சுற்றுச் சுவர்களிலும் இருக்கும் சில சிற்பங்களைத் தனியாக எடுத்துக் கொண்டால், மேலோட்டமான பார்வையில் அவை ஆபாசம் என கருதத் தக்கவையாக இருக்கும். ஆனால் கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்றுவிடுவதை நாம் காணலாம். காமம், ஏன் பிறழ்நிலை காமமாக இன்றைய ஒழுக்க விதிகளால் நாம் கருதும் காமமும் கூட, இந்தச் சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன. ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. மாறாக, காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்க்கைப் பார்வை தான் அங்கு தெரிகிறது.

நம் திரைப்படங்களில் இத்தகைய ஒரு வாழ்க்கைப் பார்வை இல்லை என்பதுடன், பெண்களை வெறும் பாலியல் மலினப் பொருளாக, அஃறிணையாக காட்டும் காட்சிகளே நிரம்பி வழிகின்றன என்பதுதான் உண்மை. மேற்படி நடிகரே நடித்த பல திரைப்படங்களில் பெண்கள் மிகவும் கீழாக சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். பெண்களைக் கேலி செய்யும் பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் அந்த நடிகர் புரட்சி செய்யவில்லை. நடித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதிய வெறியை தூண்டிவிட்ட பாடலை இவர் நடித்த படமே தாங்கி வந்தது.

முழுக்க முழுக்க வர்த்தக நோக்கங்களுக்காக காமத்தை மலின வியாபாரம் செய்து வயிறு கழுவ இந்தியாவில் எவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் எவருக்கும் மறுக்க முடியாது. அப்படிப் பிழைக்கும் நிலையில் வாழும் ஏழை ஜன்மங்களுக்காக நாம் நிச்சயமாக பரிதாபமும் பட வேண்டும். ஆனால், கோடிகளில் புரளும் நடிகன் ஒருவன் - ஆண்டாளையும், கோவில் சிற்பங்களையும், நம் வருங்கால சந்ததிகளுக்கும் ஏன் மானுடம் முழுமைக்கும் இந்த மண்ணின் மரபு அளித்த அருட்கொடைகளையும் தன்னுடைய வர்த்தக மலின கூத்தடிப்புக்கு நாணமின்றி, கேடயமாக, மோசடித்தனமாக பயன்படுத்தும் போது, நாம் என்ன செய்ய வேண்டும்?

ஹிந்து அமைப்புகள் இந்த ஆபாச தாக்குதலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். இதன் மூலம் ஹிந்து ஞானத்தை, ஹிந்து கலைகளின் உன்னதத்தை பொது மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலை வெளிப்படுத்த வேண்டும்.

இப்படத்தை நாம் நிராகரிக்கலாம். இப்படம் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் உண்மையைக் கூறும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கலாம். தன் தனி வாழ்க்கையிலும் சரி, தொழில்முறை வாழ்க்கையிலும் சரி, எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒருவர், தன்னைப் பண்பாட்டின் அடுத்தக்கட்ட பெருநாயகனாக காட்டிக்கொள்ளும் அவல மோசடியை வெளிக்காட்டலாம். பொது விவாதங்கள், தொலைகாட்சி விவாதங்களுக்கு அழைத்து, சவால் விடுத்து, இவர்களின் பொய்களை தோலுரிக்கலாம்.

என்ன செய்யக் கூடாது? உணர்ச்சிகரமான நிலையில் மோசமான எதிர்வினைகளை செய்வதன் மூலம், இந்த ஆபாச வியாபாரிகள் நினைக்கும் விளம்பரத்தை அளித்துவிடும் தவறை மட்டும் செய்யவே கூடாது.

http://www.tamilhindu.com/2010/12/ant-hindu-vulgar-poem-what-should-we-do/

No comments:

Post a Comment