வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்!
*அ.இனிதா, இனாம் கரிசல் குளம், விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ‘நீங்கள் எல்லாம் இன்னும் ஆர்வத்தோடு செயல்பட வேண்டுமென்று நான் கூறுவது, தி.மு.க., ஆட்சிப்பொறுப்பிற்கு வர வேண்டும்; நாங்கள் எல்லாம் பதவியைப் பெற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகிற வாசகங்கள் அல்ல… ‘என்று, பதவியைப் பெற வெறுப்பது போல் பாசங்கு பண்ணி, கழகத்தினரிடையே கலந்தாய்வில் பேசியுள்ளார் கருணாநிதி.இதுநாள் வரை பதவியைப் பெற கருணாநிதி சொல்லிய வாசகங்கள் என்னென்ன? ஒன்றா… இரண்டா… அத்தனையும் நகைச்சுவை சொட்டச் சொட்ட நவரச சீன்கள் தான்! இதோ…
* கடந்த 1969ல், அண்ணாதுரை காலமானவுடன், தலைமைப் பதவியைப் பிடிக்க நடந்த,அடிதடி சண்டையில் உச்சகட்டமாக தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள இம்பீரியல் ஓட்டலில் ஒளித்து வைத்து, இந்திய அரசியலில் எம்.எல்.ஏ.க்கள் கடத்தலுக்கு முதன் முதலாக பிள்ளையார் சுழிபோட்டார் கருணாநிதி.
* பதவியை நாவலருக்கு விட்டுக் கொடுக்காமல் பறித்த பின், நடந்த கடற்கரை பாராட்டுக் கூட்டத்தில், ‘இப்பதவி என் தோளில் கிடக்கும் துண்டுக்கு சமம்; எந்த நிமிடமும் தூக்கி கடலில் விசிறி விட தயங்க மாட்டேன்… என்று கூறிவிட்டு, கடந்த 36 ஆண்டுகளில் துண்டின் கலரை பலமுறை விதவிதமாக மாற்றி, வீட்டை விட்டு வெளியே வரும் பொழுதே, மிகவும் உஷாராக தன் இரு கையாலும் இறுக்கிப் பிடித்து, யாரையும் உருவ விடாமல், இன்று வரை பதவியைப் பாதுகாத்து, தக்க வைத்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.
* எம்.ஜி.ஆருடன் மோதிய மூன்று தேர்தலில் பதவியைப் பெற படாத பாடுபட்டு, தோல்வி கண்டு, பச்சைத் தமிழர்களை, ‘வாழை மட்டைகள், மாக்கள், மரமண்டைகள், மடசாம்பிராணிகள், சொரணை கெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்… எனத் திட்டித் தீர்த்தார் கருணாநிதி.
* அந்தத் தேர்தல்களில், எப்படியும் பதவியைப் பெற்றே தீர வேண்டுமென்ற பகீரத முயற்சியில், ‘என்னைத் தூக்கி கடலில் போட்டால் கட்டுமரமாவேன்; எரித்தால் கரித்துண்டாக எரிக்க பயன்படுவேன்; உங்கள் காலுக்குச் செருப்பாவேன் ‘ என்று மிகச் சிறந்த நகைச்சுவை வாசகங்களைச் சொல்லி, ஓட்டுக் கேட்டு, ஒட்டு மொத்த தமிழர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து, மகிழ்ச்சியுடன் இருக்க இலவச காமெடி வழங்கினார் கருணாநிதி.
* முத்தாய்ப்பாக ‘எம்.ஜி.ஆர்., இறந்து விட்டதாக கூறுகின்றனர். எனக்கு எல்லாரும் ஓட்டளித்து முதல்வராக்குங்கள். ஒருவேளை எம்.ஜி.ஆர்., பிழைத்து வந்தால் ஆட்சியை அப்படியே அவரிடம் அளித்து விடுகிறேன்…’ என்று பறைசாற்றினார் கருணாநிதி.இப்படி, எண்ணற்ற நகைச்சுவை ஓரங்க நாடகங்களை ஒவ்வொரு தேர்தலிலும் அரங்கேற்றி, எல்லாத் தமிழர்களையும் விலா நோக விண்ணதிர சிரிக்க வைப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதி தான்!வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் பதவியைப் பெற என்னென்ன நகைச்சுவை வாசகங்களை கருணாநிதி கூறி, தமிழர்களை மகிழ்விக்கப் போகிறாரோ என, வாக்காளர்கள் தேர்தலை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து, வாய்விட்டுச் சிரிக்க காத்திருக்கின்றனர்.
ஆம்… வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
No comments:
Post a Comment