1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.
இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.
தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.
ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.
கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.
அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.
பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை. தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார். பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.
அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.
அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901155&format=html
No comments:
Post a Comment