ஒரு லாரி மணல் விலை ரூ.19,500 : பேரை கேட்டாலே மயக்கம் வருது
சேலம்:மணல் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால், மணல் கிடைக்காமல் தமிழகத்தில் கட்டுமான பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து விட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே கட்டுமான பொருட்களான சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான பணி தள்ளாடி வருகிறது. இந்நிலையில், ஒரு வாரத்தில் மணல் விலையும் இரு மடங்கு உயர்ந்துவிட்டதால் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கிவிட்டது.திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூர், மணல்மேடு, முசிறி, நொச்சியம், வாத்தலை, குளித்தலை, லாலாப்பேட்டை, வாங்கல் போன்ற இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து நாள்தோறும் மணல் எடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வரப்படுகிறது.சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து 7,000 லாரிகள் மூலம் தினம்தோறும் மணல் எடுத்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்வது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, இந்த பகுதிகளில் பொக்லைன் மூலம் மணல் எடுக்க சென்னை ஹைகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனால், ஆட்கள் மூலம் மட்டுமே மணல் அள்ளப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 முதல் 30 லாரிகளுக்கு மட்டுமே லோடு ஏற்றப்படுகிறது. இப்படி ஏற்றப்படும் லோடு, கட்டுமான பணிகளுக்கு போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது.கடந்த மாதம் ஒரு லாரி மணல்( 3யூனிட்) 6, 200 ரூபாய்க்கு விற்றது. கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால் இன்னும் கொஞ்சம் அதிகரித்து ஒரு லாரி மணல் 7, 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்பொழுது குவாரிகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டதால், ஒரு லாரி மணல் விலை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 19 ஆயிரம் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே இருப்பு வைத்துள்ள மணல் வியாபாரிகள் தான், தற்பொழுது விற்பனை செய்து வருகின்றனர். இந்த இருப்பும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தாக்குபிடிக்கும். இந்த பற்றாக்குறையினால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கட்டுமான துறையை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கும்.
மதுரையில் மணலுக்கு திடீர் “மவுசு’: ரூ.10 ஆயிரம் என்றாலும் “ம்ஹூம்’: கட்டடம் கட்டுவதில் சிக்கல் : மதுரையில் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இருப்பு வைத்திருக்கும் மணல் ஒரு லோடு(10 டன்) 4 ஆயிரம் என்பது 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இத்தொகையை கொடுக்க தயாராக இருந்தாலும், மணல் கிடைப்பது அரிதாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் இருந்து இயந்திரத்தின் மூலம் மணல் அள்ளப்பட்டு, மதுரை கொண்டு வரப்படுகிறது. இத்தொழிலை நம்பி 436 அரைபாடி லாரிகள் உள்ளன. இரண்டு யூனிட் (10 டன்) கொண்ட ஒரு லோடு மணலை 1700 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து செலவு 1300 ரூபாய், லோடுமேன் கூலி 150 ரூபாய், டிரைவர் படி 350 ரூபாய் , லாபம் 500 ரூபாய் என 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.
இந்நிலையில், “இயந்திரத்தின் மூலம் ஆற்றில் மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. ஆட்களை வைத்து அள்ள வேண்டும்’ என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களாக பரமக்குடியில் இருந்து இயந்திரத்தில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால், நேற்று முதல் அரைபாடி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை மணல் லாரி உரிமையாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
சங்கத் தலைவர் ரவிராஜன் கூறியதாவது : ஆள் வைத்து மணல் அள்ளுவது முடியாதகாரியம். ஆட்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. பரமக்குடியில் இருந்து இயந்திரத்தின் மூலம் மணல் கொண்டு வந்து, மதுரையில் இறக்க ஆட்கள் கிடைப்பதில்லை. ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால் காலதாமதம் மற்றும் மணல் அள்ளும் கூலி ஆகியவற்றை கணக்கிடும்போது, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே, இப்பிரச்னையால் 50 லாரிகள் முடங்கி உள்ளன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ஏற்கனவே செங்கல், இரும்பு, சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மணல் விலையும் 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், கட்டடம், வீடு கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை கொடுக்க பொதுமக்கள் தயாராக இருந்தாலும், மணல் தட்டுப்பாட்டால் “கிராக்கி’ ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment