Wednesday, January 5, 2011

ராஜா - ராஜாதி ராஜா

தி.மு.க-வுக்கு அழிக்க முடியாத 'கறுப்பு அடையாள'த்தை உருவாக்கித் தந்துவிட்டு, ஒருவழியாக பதவி விலகி இருக்கிறார் ஆ.ராசா.

'தி.மு.க-வுக்கும் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக் கும் நம்பிக்கைக்கு உரியவராக ஆ.ராசா இருந்தார். அவர் ஏற்றுக்கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமை உணர்வு ஆகிவற்றைத் தொடர்ந்து கடைப் பிடித்து, தலித் இனத்தின் கதிரவனாக விளங்குபவர்' என்று கட்சித் தலைவர் கருணாநிதி தனது விளக்க அறிக்கையில் சொல்லியிருக்கும் வார்த்தைகள், உடைந்து நொறுங்கிய பதவி நாற்காலிக்குப் போடப் பட்ட தற்காலிக ஒட்டு வேலைகளாக மட்டுமே தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்களால் பார்க்கப்படுகின்றன.

நேற்றைக்கு பிரச்னை தொடங்கி... இன்றைக்கு ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்... என்ற கதியில் அவசர அவசரமாக நடந்து முடிந்த விவகாரம் அல்ல இது. சுமார் இரண்டு ஆண்டு காலமாகப் பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வைத்தார்கள். அப்போதுஎல்லாம் அமைச்சர் ஆ.ராசாவும் அவரின் தலைவர் கருணாநிதியும் சொன்ன பதில்கள் என்ன?

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்படவில்லை. 99-ம் ஆண்டு விதிமுறையைத்தான் நாங்களும் பின்பற்றினோம். பிரமோத் மகாஜனும் அருண் ஷோரியும் எதைக் கடைப்பிடித்தார்களோ அதைத்தான் நாங்களும் செய்தோம். பிரதமர் அலுவலகத்துக்கு இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் கொடுத்துவிட்டுத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். இதில் முறைகேடு நடக்கத் துளியும் சாத்தியம் இல்லை. என்னைப் பதவி விலகச் சொல்வது, சில அரசியல்வாதிகளும் மீடியாக்களும் செய்யும் சதி" என்று ஆ.ராசா சொன்னார். இதையேதான் கருணாநிதியும் வழிமொழிந்தார்.

பதவி விலகலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, "ராசா எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் பதவி விலக மாட்டார்" என்று அடித்துச் சொன்னார். வழக்கம்போல சாதிக் கத்தியை உயர்த்திக் காட்டினார். காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி யும், மகாராஷ்டிரா ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு முறைகேட்டில் ஊடகங் களால் கிழிக்கப்பட்ட அந்த மாநில முதலமைச்சர் அசோக் சவானும்கூட சாதிரீதியாகத்தான் குறிவைக்கப்பட்டார்களா என்பதை தி.மு.க-தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!

ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் பின்பற்றப் பட்டனவா, அதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டதா என்ற இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இதை அனைவரும் பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தின் ஆரம்பகர்த்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி. ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக ஆனதற்குப் பின்னால், இந்தத் துறைக்குச் சம்பந்தம் இல்லாத கம்பெனிகள் உள்ளே நுழைந்து, கான்ட்ராக்ட் பெற்றதைப் பார்த்து 'இதில் ஏதோ கோல்மால் நடக்கிறது' என்று யெச்சூரி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். கூட்டணியில் இருக்கும் முக்கியக் கட்சியான தி.மு.க-வுக்குக் கசப்பை ஏற்படுத்தும் என்பதால், மன்மோகன் அப்போது மௌனம் சாதித்தார்.

உடனே, சில சமூக ஆர்வலர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனார்கள். "எல்லா டெண்டர்களும் யார் தகுதியானவர் என்று பார்த்துத்தானே தரப்படுகிறது? இதில் மட்டும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தந்து இருப்பது தவறானது. சினிமா டிக்கெட்டைக் கொடுப்பதுபோல டெண்டர் தருவது தவறு" என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கும் இது சென்றது. அவர்கள் சுழற்றிச் சுழற்றி அடிக்க ஆரம்பித்ததுதான், இன்று ராசாவை ராஜினாமா கடிதம் எழுதவைத்து இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னரே, "ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். தி.மு.க-வில் இருந்து இன்னொருவரை மந்திரி ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று சோனியா தரப்பில் இருந்து கருணாநிதிக்குத் தகவல் தரப்பட்டதாக டெல்லி உள் விஷயங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 'அப்படிச் செய்தால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்' என்று சென்னையில் இருந்து தகவல் தரப்பட்டுள்ளது.

"சி.பி.ஐ. இந்த வழக்கை முறைப்படி விசாரித்தபோது கிடைத்த முதல்கட்ட ஆவணங்களே தவறு நடந்திருப்பதை நிரூபிப்பதாக உள்ளன. மேலும், சில நேரடி சாட்சிகளையும் சி.பி.ஐ. ஏற்பாடு செய்து விட்டது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இந்த சாட்சிகளே போதுமானது. அடுத்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் கிளப்பப்பட்டு உள்ளன. முறைப்படி 2ஜி டெண்டரை விட்டிருந்தால், மேலும் 1.76 லட்சம் கோடிக்கு லாபம் பார்த்திருக்க முடியும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. இந்த டெண்டரை எடுத்த சில கம்பெனிகள், தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தம் இல்லாத பில்டிங் கான்ட்ராக்ட் வேலை பார்க்கும் கம்பெனிகள். இவர்கள் யார் மூலமாக இந்தத் துறைக்குள் வந்தார்கள்? என்று இந்த அறிக்கை கேட்கிறது.

சி.பி.ஐ வைத்துள்ள தொலைபேசி, ஆடியோ டேப் உள்ளிட்ட தகவல்கள், கணக்குத் தணிக்கைத் துறை யின் அறிக்கை இரண்டுமே இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குப் போதுமானதாக இருக்கின்றன. எனவே, இதில் சம்பந்தப்பட்ட ராசாவை மந்திரியாக வைத்துக்கொண்டு விசாரணையை நடத்த முடியாது. நடத்தினால் நியாயமாக இருக்காது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்காது. எனவே, ராஜினாமா செய்யச் சொல்லுங் கள்' என்று சோனியா சார்பாகச் சொல்லப்பட்ட காரணங்களை தி.மு.க. தரப்பு கடந்த மூன்று மாதங்களாக மறுத்து வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஒரு சம்பவம், சோனியாவின் நம்பர் 10, ஜன்பத் இல்லத்தில் அதிர்ச்சியைக் கிளப்பியது. காமன் வெல்த் போட்டிகள் நடத்துவதற்காக டெல்லியில் எத்தனையோ உள் கட்டமைப்புப் பணிகள் செய்யப்பட்டதும், அதில் ஊழல் தலைவிரித்து ஆடியதும் அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்தப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று உடைந்து நொறுங்கியதைப் பார்த்த பிரியங்கா, அன்றைய தினம் அம்மா சோனியாவையும் அண்ணன் ராகுலையும் அழைத்துக் கோபமாகப் பேசியிருக்கிறார்.

"இந்த முறைகேட்டுக்கு யார் காரணமோ, அவர்களை இன்றைக்கே டிஸ்மிஸ் பண்ணுங்கள். காங்கிரஸ் கட்சியின் இமேஜ் இந்த விளையாட்டுப் போட்டியோடு முடியப்போகிறது. என்னுடைய தோழிகள் இதுபற்றிச் சொல்லும் தகவல்கள் என்னையே வெட்கப்பட வைத்தன" என்று கோபமாகச் சொன்னாராம்.

"ஊழல் நடந்திருப்பது உண்மை. அதற்காக சம்பந்தப்பட்டவர்களை உடனே டிஸ்மிஸ் பண்ண முடியாது. இது விளையாட்டுப் போட்டியை மட்டும் அல்ல; தேசத்தின் இமேஜையே பாதிக்கும். போட்டிகள் முடிந்த பிறகு செய்கிறேன்" என்று சோனியா சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

"ஊழல் குற்றச்சாட்டுகள் யார் மீது வந்தாலும், அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள். அதைத் செய்தாலே, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு எல்லா மாநிலங்களிலும் வளரும்" என்று அப்போதே பேசப்பட்டதாம். சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டதன் பின்னணியும் இதுதான். மகாராஷ்டிரா முறைகேடு தொடர்பாக அசோக் சவான், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதற்கும் இதுதான் காரணம். "இவர்கள் இருவரும் ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாளே தி.மு.க. தரப்புக்கும் ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டார்கள். கருணாநிதி நடத்திய போராட்டத்தால்தான் மேலும் 10 நாட்கள் நீடித்தன. எனவே, இவை அனைத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பிரியங்காதான்" என்கிறார்கள் டெல்லியில்.

அசோக் சவானுக்கு அடுத்ததாக யார் முதலமைச்சராக வருவார்கள் என்று ராகுலிடம் கேட்டபோது, "ஊழல் இல்லாத ஒரு நபர்" என்று அவர் பதில் அளிக்கத் தூண்டுதலாகஅமைந்ததாம் பிரியங்கா சொல்லிய வார்த்தைகள். "சிறு கறையுடனும் நான் பதவி விலகத் தயார் இல்லை" என்று ஆ.ராசா கிளிப்பிள்ளையைப் போலத் திரும்பத் திரும்பச் சொன்னாலும், அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கத் தயாராக இல்லை. ராசா ராஜினாமா செய்வாரா என்று காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது எல்லாம், "அது, தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவு" என்று சொன்னார்கள். அதாவது, கருணாநிதி சம்மதித்தால் எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்பதுதான் நிஜமாக இருந்தது.

'வடக்கு வாழ்கிறது' என்பது தி.மு.க-வின் ஆதி முழக்கங்களில் ஒன்று. 'வடக்கு வறுக்கிறது' என்பதே இன்று தி.மு.க. வெளியிட முடியாத முழக்கம்!

http://www.rishas.com/space.php?uid=2&do=blog&id=699

No comments:

Post a Comment