Saturday, January 8, 2011

ஊழலில் பொதுமக்களுக்கும் பங்கு!

ஒவ்வோர் ஆட்சியிலும் ஒரு பெயரில் ஊழல் என்ற வழக்கு (!) மாறி, இப்போது ஒவ்வோராண்டிலும் ஒரு பெயரில் ஊழல் என்பது பிரபலமாகிவிட்டது. அதேபோல, ஊழலின் உத்திகளும் மாறியிருக்கின்றன. ஏதோவொரு சான்றுக்காக வருவாய் அலுவலகங்களில் ரூ. 50, 100 கொடுப்பதும், பெரிய அளவில் ஏதோவொரு ஆதாயத்துக்காக பெட்டிகளில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கொடுப்பதும் பழைய முறை.

அதன்பிறகு ரொக்கம் தவிர்க்கப்பட்டு, உரியவரின் வீடுகளுக்குத் தேவையான பொருள்களாக (டிவி, குளிர்சாதனப் பெட்டி...) நேரடியாக இறக்கிவிடுவதும், ஆதாயத்தின் அளவுக்கேற்ப வீடு, பண்ணைத் தோட்டம் வாங்கித் தருவதும் அண்மைக்கால முறைகள். இவையெல்லாவற்றையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இப்போது நேரடியாக ஆதாயம் பெறுவது என்ற ஊழல் இலக்கணம் முற்றிலும் மாறி, பல்வேறு நவீனமான உத்திகளுடன் அது பிரவாகமெடுத்திருக்கிறது. நேரடியாக நடப்பது எல்லாமும் சட்டப்படி நடக்கிறது. அதன்மூலம் பிறருக்குக் கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெற்றுக் கொள்வது அல்லது அந்த ஆதாயம் பெறுபவராகவே "பினாமியில்' மாறிக் கொள்வது என்ற நவீனம் ஊழலில் ஊற்றெடுத்திருக்கிறது.

இந்தப் பரிணாம வளர்ச்சி இன்னும் வளருமா? என்ற கேள்வி அச்சம் தொடர்பானது. ஏன் வளர்ந்து கொண்டே இருக்கிறது? என்ற கேள்வி ஆய்வு தொடர்பானது. இந்த இரண்டையும் பற்றி யாரும் கவலைப்பட்டதே இல்லை. குய்யோமுறையோவென்று கத்துவோமே தவிர, யோசித்ததே கிடையாது. அதுவும்கூட, தொகையைக் கேட்ட ஆச்சரியம்தானே தவிர, வேறெதுவுமாக இருக்க வாய்ப்பில்லை.

பரிணாம வளர்ச்சி இருக்குமா என்ற அச்சத்துக்கு உடனடி பதில், "வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது' என்பதாகத்தான் இருக்கும். ஏனென்று மறுபடியும் ஒரு கேள்வி கேட்டால், "சட்டவிதிமுறைகள் அப்படித்தான் இருக்கின்றன' என்ற "ரெடிமேட்' பதிலையும் நாமே வைத்திருக்கிறோம். அதுவும் உண்மையல்ல.

இந்த ஊழல் உலகத்துடன் ஏதோ ஒருவகையில் நம்மையும் பிணைத்து விட்டிருக்கிறார்கள் என்பதுதான் இதற்குக் காரணம். சிறியதாகவோ, பெரியதாகவோ பொதுமக்களையும் இலகுவாகப் பிணைத்துவிட்டதன் விளைவு, நேரடியாகக் கேள்வி கேட்கும் திராணியை இழந்துவிட்டோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம்- பொதுவாகவே திமுகவி -னரிடம் - இதுவும் வேண்டாம், ஆளும் தரப்பிலிருந்து எல்லோரும் ஏதோவொரு பெயரில் "லஞ்சம்' பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். பெறுபவர்களுக்கு வேண்டுமானால் நன்கொடையாகவோ, அன்பளிப்பாகவோ, சலுகையாகவோ... இன்னும் வேறு ஏதோவொரு பெயரிலோ இருக்கலாம்.

"வாயை அடைக்க' என்று வெளிப்படையாகவும் சொல்ல வேண்டாமே. ஆனால், கொடுப்பவர் ஏதோவொரு ஆதாயத்தை மனதில் கொண்டுதான் கொடுக்கிறார். எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் தோழமைக் கட்சிகள், இவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும்- எதிர்க்கும், எல்லோரையும் எதிர்க்கும் அமைப்பினர், ஊழலுக்கு எதிராகக் கூக்குரலிடுவோர் என சகலரும் வாங்கிக் கொள்கிறார்கள்.

இதோடு நின்றுவிடவில்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் உத்தியைக் கொண்டு அவர்கள் செய்த பாவத்தை-லாபத்தைக் கணிசமான பெரும்கூட்டத்துக்குமே பிரித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தாலும், புரிந்து கொள்ளப்படுவதில்லை.

எடுத்துக்காட்டுக்கு, அலைக்கற்றை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். பல லட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு வருவாய் இழப்பு என்கிறார்கள். அதிலிருந்து சில ஆயிரம் கோடிகள் ராசாவுக்கோ, அவர் மூலமாக திமுகவினருக்கோ, காங்கிரஸ்காரர்களுக்கோ கிடைத்திருக்கலாம்.

தொகை குறைவாகவோ, கூடுதலாகவோ, பங்கு பிரித்ததாகக் கூறப்பட்டதில் விடுபடுதலோ இருந்தால் தயைகூர்ந்து யாரும் வருத்தப்பட வேண்டாம்! எடுத்துக்காட்டுக்குத்தான்.

அலைக்கற்றை விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்த 2008-க்குப் பிறகு தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் விநியோகம் செய்யப்பட்ட தொகை எங்கிருந்து வந்தது? வாக்குக்குக் கிடைத்த தொகை ரூ. ஆயிரம் என்கிறார்கள், ரூ. 2 ஆயிரம் என்கிறார்கள். மூக்குத்தி என்கிறார்கள். குடம் என்கிறார்கள், வேஷ்டி- சேலை என்கிறார்கள். இன்னும் என்னென்னவோ.

ஆக, கொடுத்திருக்கிறார்கள். இதை திமுகவினரும்கூட, அண்மையில் சென்னையில் தேர்தல் அலுவலர்களைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் பேசியபோது லேசுபாசாக ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.

அப்படியானால், அலைக்கற்றை விவகாரத்திலிருந்து ஆதாயமாகக் கிடைத்த பணம், பிரித்தளிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளலாம் அல்லவா? அதுதானே உண்மை. கள் விற்ற காசு புளிக்கவா போகிறது என்று விட்டுவிட முடியுமா?

பெரும் தொகையைப் பார்த்து மலைத்துப்போய் சில சொற்களை உதிர்ப்பதுதான் இப்போதைக்கு நாம் வெளிப்படுத்தும் ஆதங்கங்களே தவிர, வேறொன்றுமில்லை. சரி, என்ன செய்யலாம்?

இந்த ஆண்டு இரு தேர்தல்களை தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கிறார்கள். சட்டப்பேரவைக்கான தேர்தல் முன்னதாகவும், அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் வரவிருக்கிறது. பேரவைத் தேர்தல்களின் முடிவு இரண்டாவது தேர்தலைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்யலாம்! இப்போ ஊழலில் பொதுமக்களுக்கும் பங்கு!தைக்கு இரு தேர்தல்கள் வரவிருப்பதாகவே கருதுவோம். பெரிய மாற்றத்தை மக்கள் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பது அபத்தம் எனக் கடந்த கால வரலாறுகளில் இருந்து புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

இருந்தாலும், ஒரு நப்பாசை. பெரிய மாற்றத்தை எதுவும் ஏற்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் பணம் வாங்காமல் விரும்பியோருக்கு வாக்களிக்கும் நேர்மையை வாக்காளப் பெருங்குடி மக்கள் மேற்கொள்வார்களேயானால் அதுவே பெரிய வெற்றியாகக் கருதலாம்.

www.dinamani.com

No comments:

Post a Comment